எல்லோருக்கும் கல்வியறிவு என்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

ஈரோடு: எல்லோருக்கும் கல்வியறிவு என்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்-புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027ன் கீழ் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோட்டில் நேற்று தொடங்கி வைத்தார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், முதலமைச்சர் அறிவித்தபடி கல்வியறிவு பெறாதவர்களே இருக்கக்கூடாது எனும் நிலையை உருவாக்கும் நோக்கில், இந்த வருடம் 4.08 லட்சம் பேருக்கு கல்வியறிவு பெறச் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்த ஆண்டில் 3.10 லட்சம் இலக்கில் 3.15 லட்சத்தை எட்டியிருந்தோம். முன்பெல்லாம் கேரளத்தின் கல்வியறிவை உதாரணம் காட்டி பெருமையாக பேசுவோம். ஆனால், இன்று தமிழக முதலமைச்சரைப் பற்றி கேரளத்தினர் பெருமையாக பேசும் அளவுக்கு தமிழகம் வளர்ந்துள்ளது. வளர்கின்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக  தெரியவந்துள்ளது. அதில், உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முதல் 5 பிரிவுகளில் நமது கல்வித் துறையின் வளர்ச்சியும் இடம் பிடித்திருப்பது நமக்கு பெருமை.  திராவிட மாடல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் “எல்லாருக்கும் எல்லாம்” என்பது திமுக அரசின் திட்டமாக இருக்கிறதென்றால் “எல்லாருக்கும் எழுத்தறிவு” என்பது தான் பள்ளிக்கல்வித் துறையின் திட்டம், என்றார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சி.கே.சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post எல்லோருக்கும் கல்வியறிவு என்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: