எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் விலையை அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 2: மெலட்டூர் பகுதியில் பருத்தி சாகுபடியில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில்நல் சாகுபடி பிரதானமாக நடந்து வருகிறது. அதேபோல கரும்பு, பயிர்களும் சமீப காலமாக பருத்தி சாகுபடி மீது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பருத்தி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கான விலையும் கிடைத்து வந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் மெலட்டூர், திருக்கருகாவூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து உள்ளனர். இந்த ஆண்டு கோடையில் அதிகளவில் மழை பெய்ததால் பருத்தி பயிர்கள் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அதோடு அதிக வெப்பம் காரணமாக பருத்தி பிஞ்சுகள் அதிகளவில் உதிர்ந்தன. காய்களும் குறந்த அளவில் காணப்படுவதால் எதிர்பார்த்த மகசூல் இல்லை என்றும், இந்த ஆண்டுக்கான பருத்திக்கான கொள்முதல் விலையும் பாதியாக சரிந்ததால் எதிர்பார்த்த விலையும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் ஏமாற்றத்துடன் கூறி உள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் பருத்தி சாகுபடியில் பெரிய அளவில் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு கோடை காலத்தையொட்டி பருத்தி அதிகமாக சாகுபடி செய்து இருந்தோம். இந்த நிலையில் கோடையில் அதிகளவில் மழை பெய்ததால் பருத்தி பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. காய் பிடிக்காமல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டு பருத்தி கொள்முதல் விலையும் எதிர்பார்த்தபடி இல்லை. பருத்தி விவசாயிகளை பாதுகாக்க பருத்திக்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

The post எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் விலையை அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: