தமிழகத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகள் உள்ளது. இதில், 13 மாவட்டங்களை தவிர்த்து தற்போது வரை 24 மாவட்டங்களில் மட்டும் தான் தேர்தல் நடந்தது. இதில் 7,300 பேர் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வாகினர். ஊராட்சி மன்றங்களுக்கு நிதி என்பது மாநில நிதிக்குழு மானியத்தில் 10 சதவீதம் 3 அடுக்கு ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும். அரசு வருவாயில் 10 சதவீதத்தை எடுத்து அதனை 100ஆக பிரித்து 58 சதவீதம் கிராம ஊராட்சிகளுக்கும், ஒன்றிய ஊராட்சிகளுக்கு, மாவட்ட ஊராட்சிக்களுக்கு என்று பிரித்து வழங்கப்படும். இந்த அரசாங்கம் வந்த பின்னர் இந்த நிதியை முறையாக பிரித்து வழங்கவில்லை.தற்போது வழங்கப்படும் 10 சதவீதம் நிதி போதுமானதாக இல்லை. இதனை 15 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சொல்லப் போனால் ஒரு பஞ்சாயத்துக்கு மக்கள் தொகை அடிப்படையில் நிதி பிரிக்கப்படுகிறது. 500 வாக்காளர்கள் இருக்கிற இடத்தில் ரூ.50 ஆயிரம் வரை மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து வருகிறது. அதையும், ரூ.10,000, ரூ.15,000, ரூ.10000, ரூ.15000 என்று என்று பிரித்து வழங்குகின்றனர். சில பஞ்சாயத்துக்களில் பணமே இல்லாமல் ஜீரோ பேலன்ஸில் தான் இருக்கிறது. நிதி எல்லாம் கொடுக்கவில்லை. நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகாமல் இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத கடந்த 4 ஆண்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. கிராம ஊராட்சிகளில் மூலம் தான் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. குளிக்க, குடிக்க, துணி துவைக்க தண்ணீர், தெருவிளக்கு, சுகாதாரம் என்று கிராம ஊராட்சிகளில் தான் இருக்கிறது. ஊராட்சிகள் இயங்காத காலத்தில் அது எல்லாம் முடங்கி போனது. ஒரு கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள் இருந்தால் அந்த கிராமத்தில் தண்ணீர் வரவில்லை, மின் விளக்கு எரியவில்லை என்று சொல்லுவார்கள். உடனே அது சரி செய்யப்படும். அதிகாரிகளிடத்தில் சொல்வது என்பது கஷ்டம். 15, 20 கிலோ மீட்டர் தொலைவில் அலுவலகம் இருக்கும். அங்கே போய் அவர்களால் சொல்லவும் முடியாது. கொரோனா காலத்தில் கிராம ஊராட்சி தலைவர்கள் பிளிச்சிங் பவுடர் அடித்து கிராமங்களை சுத்தமாக வைத்திருந்ததால் தான் கிராமப்புறங்களில் பாதிப்பு என்பது இல்லை.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணிகளில் ஒன்றாக கட்டுமான பணிகள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளிலும் ஊராட்சி நிர்வாகத்தை புறம்தள்ளியும் அரசு அலுவலர்களே தன்னிச்சையாக முடிவெடுத்து ‘வெண்டார்’ நியமனம் செய்வதும், பணிகளை அவர்களே தேர்வு செய்து அதற்கு தக்கப்படி அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களை நிர்பந்தப்படுத்தி ஊராட்சி தீர்மானங்களை கேட்பது ஏற்படையது அல்ல. மத்திய அரசால் வழங்கப்படும் திட்ட நிதியான 14, 15வது நிதி குழு மானியத்தை ஊராட்சிக்கு வழங்கப்படும் பங்கீட்டு தொகையை மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக ஒன்றிய அளவில் அல்லது மாவட்ட அளவில் நிதிகளை ஊராட்சி பங்கீட்டு தொகையையும் ஒருங்கிணைத்து இ-டெண்டர் என்ற பெயரில் (பேக்கேஜ் டெண்டர்) அரசு அலுவலர்களே பணியையும், ஒப்பந்த புள்ளியையும் தன்னிச்சையாக தேர்வு செய்வது மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது. மாநில அரசு மற்றும் மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் தீர்மானத்தின் அடிப்படையில் பணிகளை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியர் நிர்வாக அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், ஊராட்சியில் சம்பந்தப்பட்ட கணக்கில் நிதி இருந்தும் மாவட்ட ஆட்சியர்கள் நிர்வாக அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை ஊராட்சி நிர்வாகத்தை புறம் தள்ளி சம்பந்தப்பட்ட அலுவலர்களும், ஒப்பந்ததாரர்களும் தன்னிச்சையாக பணிகளை மேற்கொள்வது ஏற்புடையது அல்ல. மத்திய அரசால் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளில் ஒன்றாக தனிநபர் கழிப்பறை பயனாளிகள் தேர்வு மற்றும் கழிப்பறை கட்டுதல் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஊக்குநர்களை (motivator) கொண்டு ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடுகின்றனர். ஆகவே ஊக்குநர்கள் பணியிடத்தை ரத்து செய்து பஞ்சாயத்துராஜ் சட்டப்படி ஊராட்சி நிர்வாகத்திடம் அரசு ஒப்படைக்க வேண்டும். ஆண்டுக்கு 4 முறை கிராம சபை கூட்டங்களை நடத்தி கிராம வளர்ச்சிக்கு உண்டான திட்டங்கள், பணிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை தீர்க்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றி அதன் அடிப்படையில் அத்தியாவசிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கிராம சபை தீர்மானங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற தீர்மானங்களுக்கு இணையானது என பஞ்சாயத்து ராஜ் சட்டம் உள்ளது. ஆனால், தற்போது அதற்கு எதிர்மாறாக கொரோனா தொற்றை காரணம் காட்டி கிராம சபை நடத்த அரசு பல்வேறு நிலைகளில் தடை விதித்து வருவது முற்றிலும் ஜனநாயகத்திற்கு முரணானது. எனவே, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உரிய காலங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் (ஆண், பெண் மற்றும் திருநங்கை) குறிப்பாக பெண் தலைவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊராட்சி மன்றங்களுக்கு நிதி ஆதாரமான கனிமம், மீன்பாசி, வனங்கள் முத்திரைத்தாள் கட்டணங்கள் மற்றும் வீட்டு வரி ஈட்டு மானியம் சுமார் 10 ஆண்டாக நிலுவையில் உள்ள ஊராட்சிகளுக்கான பங்கீட்டு தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது. பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களும் அன்றாட பணியாகவும், முழு நேர பணியாகவும் செய்து வருகிறோம். ஆனால், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கென மாத ஊதியம் ஏதும் இல்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் இடஒதுக்கீட்டின் படி சுழற்சி முறையில் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று வாக்களித்த மக்களுக்கும் மத்திய, மாநில அரசு திட்டங்களையும் முறையே செயல்படுத்தி கொண்டு வருகிறோம். ஊராட்சி தலைவர்களாக தேர்வு பெற்ற தலைவர்கள் யாவரும் வசதிப்படைத்தவர்கள் அல்ல. எனவே, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம், ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். …
The post உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் முடங்கிய அடிப்படை வசதிகள் பணி: தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி appeared first on Dinakaran.