வாஷிங்டன் : உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜாக் டோர்ஸே என்ற அமெரிக்க நிர்வகிக்கும் அமெரிக்க நிறுவனமான ட்விட்டர், தற்போது தனது கட்டுப்பாடுகளை அதிகரித்து அடிக்கடி பிரபலங்களை சீண்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் ட்விட்டரின் வரம்புகளை மீறியதால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்ட சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இதனையடுத்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் தொடர்ந்து அவர் வரம்புகளை மீறியதால் அவரது பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதேபோல சில பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளும் வரம்பு மீறல் காரணமாக முடக்கப்பட்டு உள்ளது
ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்கு உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒரு நாட்டின் அதிபருக்கு ஒரு தனியார் நிறுவனம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல கூடாது என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 11ம் தேதிவரை ட்விட்டர் பயனாளர்களிடம் ட்விட்டர் நிர்வாகம் கருத்துக்கணிப்பு நடத்துகிறது. இதன்படி பிரபலங்களுக்கு ட்விட்டரில் கருத்து பதிவிட குடிமக்களுக்கு இருப்பதுபோலவே கட்டுப்பாடுகள் தேவையா என்று கருத்து கேட்க ட்விட்டர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சாதாரண குடிமக்களைவிட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் இவர்கள் சமூக பொறுப்போடு ட்விட்டர் பக்கத்தில் கருத்து ட்வீட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகவே டிவிட்டர் பயனாளர்கள் இடையே இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.