நீர்மட்டம் 104 அடியை எட்டியது காவிரி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியை எட்டியுள்ளது. டெல்டா சாகுபடிக்காக இன்று அணையில் இருந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விடுகிறார். கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமானதன் காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி, விநாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. உபரிநீர் வரத்தால், பிலிகுண்டுலுவில் நேற்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 11 நாட்களாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர். போலீசாரும், தீயணைப்புத்துறையினரும், வருவாய் துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,07,064 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1 லட்சத்து 4 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் 95.73 அடியாக இருந்த நீர்மட்டம், இரவு 7 மணியளவில் 100 அடியாக உயர்ந்தது. நேற்று மாலை 104 அடியை எட்டியது. இதனால் அணையின் வலது கரையில் உள்ள 16 கண் பாலம் அருகே சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆற்றில் மலர் தூவி சிறப்பு பூஜை செய்தனர். அணையின் நீர் இருப்பு 69 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர்  அணை 104 அடியை எட்டியுள்ளதால்,  இன்று (19ம் தேதி) காலை 10.45 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா சாகுபடிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீரை திறந்து விடுகிறார். மேட்டூர் அணையின் 85 ஆண்டுகால வரலாற்றில், முதல்வர் பொறுப்பு வகிப்பவர், நீர்திறந்து விடுவது இதுவே முதல்முறையாகும். ஆரம்பத்தில் 3,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 25 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்படும்.

முதல்வர் பங்கேற்பதையொட்டி, நேற்று மேட்டூர் அணையை கலெக்டர் ரோகிணி, எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீர் திறப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேட்டூர், கொளத்தூர் வழியாக மாதேஸ்வரன் மலை செல்லும் வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 75 ஆயிரம் கனஅடியாக குறைப்பு: கடந்த 20 நாட்களாக கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் அங்குள்ள கபினி,  கே.ஆர்.எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. அணைகளின் பாதுகாப்பு கருதி 1 லட்சம் கனஅடிக்கும்  மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கே.ஆர்.எஸ் அணையில் இருந்து  விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி, கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி என 75 ஆயிரம் கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் குறைவதற்கான வாய்ப்புள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் இருப்பு முழுகொள்ளளவுடன் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுமாறு கர்நாடக அரசு, அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாளை (20ம் தேதி) கர்நாடக முதல்வர் குமாரசாமி இரு அணைகளின் நீர் இருப்பையும் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: