உரிய நேரத்தில் டெலிவரி செய்யாததால் கார் முன்பதிவு செய்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

 

மதுரை, டிச. 19: உரிய நேரத்தில் டெலிவரி செய்யாததால், புதிய கார் முன்பதிவு செய்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை நேரு நகரைச் சேர்ந்த சொர்ணமீனா, மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டீசலில் இயங்கும் குறிப்பிட்ட மாடல் காரை முன் பதிவு செய்தால் 45 முதல் 60 நாட்களுக்குள் புதிய காரை டெலிவரி செய்வதாக கூறினர்.

இதனால், கடந்த 11.07.2022ல் ரூ.21 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்தேன். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் காரை டெலிவரி செய்யவில்லை. பணம் செலுத்தி முன் பதிவு செய்து சுமார் 10 மாதங்கள் கடந்தும் கார் கிடைக்கவில்லை. இதனால், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், செலுத்திய முன்பணத்தை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணைய நீதிபதி எம்.பிறவிப்பெருமாள், உறுப்பினர் பி.சண்முகப்ரியா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் செலுத்திய முன்பணம் ரூ.21 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடனும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாயும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரமும் மனுதாரருக்கு 45 நாளில் தனியார் நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post உரிய நேரத்தில் டெலிவரி செய்யாததால் கார் முன்பதிவு செய்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: