வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மாஸ்க் போட்டால் தனது லிப்ஸ்டிக் அழிந்துவிடும் எனக் கூறி வாக்குவாதம் செய்த பெண், தனது வேலையை உதறிவிட்டு சென்றார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அமெரிக்காவில் உள்ள ஓட்டலில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரபல உணவகத்திற்கு தம்பதியர் ஜோடியாக வருகின்றனர். அவர்கள் இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு உணவு பரிமாறிய இளம்பெண் பணியாளர் முகக் கவசம் அணியவில்லை.
உணவு சாப்பிட வந்த பெண், இளம்பெண் பணியாளரிடம் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, இதனை பார்த்துக் கொண்டிருந்த உணவக மேலாளர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். அவர், எதற்காக முகக் கவசம் அணியாமல் உணவு பரிமாறுகிறாய்? என்று அந்த பெண் பணியாளரிடம் கேட்டார். அதற்கு அவர், ‘முக்கவசம் அணிந்தால் எனது உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) அழிந்துவிடும். அதனால் முகக்கவசம் அணியவில்லை’ என்றார். அதன்பின் உணவக மேலாளருக்கும், பெண் பணியாளருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.
ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அந்த பெண், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று பிடிவாதமாக பேசினார். இருந்தும், மேலாளர் பெண் பணியாளரிடம் வாடிக்கையாளரிடம் மரியாதைக் குறைவாக நடந்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். எதற்கும் சமாதானம் ஆகாத அந்த பெண், தான் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி எறிந்துவிட்டு, தான் வேலையைவிட்டு விலகுவதாக கூறினார். அதன்பிற்கு உணவகத்தை விட்டு வெளியேறினார். இதனை மிரட்சியுடன் சாப்பிட வந்த தம்பதியர் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ இணையங்களில் தலைப்புச் செய்திகளாக ேபசப்பட்டு வருகிறது. பின்னர் இது பல சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.