இறைவனே சிரித்துவிட்டான்..!

இறைத்தூதர் (ஸல்)  எப்போதும் புன்னகை சிந்தும் முகத்தினராகவே இருப்பார். “நபிகளாரை விட அதிகம் புன்னகை புரிபவரை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று நபித்தோழர்கள் கூறியுள்ளனர்.“உங்கள் சகோதரனைப் புன்னகையுடன் பார்ப்பதும் ஓர் அறச்செயலே” என்று கூறியவர் நபிகளார்.ஓர் அடியானின் வேண்டுதலைக் கேட்டு இறைவனே சிரித்துவிட்டதாக நபிமொழி நூல்களில் காணப்படுகிறது. என்ன அந்த வேண்டுதல்?

நரகத்தின் வாசலில் இருந்த ஓர் அடியான் இறைவனைப் பார்த்து, “இறைவா, நரகத்திலிருந்து வரும் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அதோ அந்தப் பசுமையான மரத்தின் கீழ் என்னைச் சேர்த்துவிடு. இதற்குப் பிறகு வேறு எதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்” என்றான்.இறைவன் அதே போல் அந்த மரத்தின் கீழ் அடியானைச் சேர்ப்பித்தான். சற்று தொலைவில் இன்னோர் அழகான பெரிய மரம் மனத்தை ஈர்த்தது. அடியான் ஆரம்பித்தான். “இறைவா, அதோ அந்த மரம் இதைவிட சற்றுப் பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறது. அந்த இடத்தில் என்னைச் சேர்த்துவிடு” என்றான்.“இனி எதையும் கேட்க மாட்டேன் என்றாயே, உன் வாக்குறுதி என்ன ஆயிற்று?” என்று வினவினான் இறைவன். “இறைவா, இதுதான் கடைசி. இதற்குப் பிறகு எதையும் கேட்கமாட்டேன்”
என்றான் அடியான்.

அந்தப் பெரிய, அழகிய மரத்தின் கீழ் வந்து சேர்ந்த அடியானுக்குச் சற்று தொலைவில் சொர்க்கத்தின் வாசல் தெரிந்தது. மனம் சும்மா இருக்குமா? மீண்டும் ஆரம்பித்தான்.“இறைவா, அதோ அந்த சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு விட்டுவிடு” என்று வேண்டினான்.“உன் வாக்குறுதி என்னப்பா ஆயிற்று?” என்று கேட்டான் இறைவன். “இறைவா, இதுதான் கடைசி. இதற்குப் பிறகு எதையும் கேட்க மாட்டேன்” என்றான் அடியான். இறைவன், அந்த அடியானைச் சொர்க்கத்தின் வாசலில் விட்டான்.சொர்க்கத்தின் நறுமணம் அடியானுக்குக் களிபேருவகை அளித்தது. உள்ளே சொர்க்கவாசிகள் மகிழ்ச்சியுடன் உரையாடுவதும் கேட்டது. சும்மா இருப்பானா என்ன? மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.

“இறைவா, நரகத்தின் வாசலில் இருந்த என்னை சொர்க்கத்தின் வாசல் வரைக்கும் கொண்டுவந்து சேர்த்துவிட்டாய். இந்தக் கதவைத் திறந்து, சொர்க்கத்தின் ஓர் ஓரத்தில் சிறிய  இடம் எனக்குத் தந்துவிடு. இதற்குப் பிறகு வேறு எதையும் கேட்க மாட்டேன்” என்றான்.

இந்த வேண்டுதலைக் கேட்டு இறைவனே சிரித்துவிட்டான். இதை எடுத்துரைத்த நபிகளாரும் தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள்.  இந்தச் சுவையான நிகழ்வில் இறைவனுக்கும் அடியானுக்கும் உள்ள நெருக்கமும், இறைவனின் தங்குதடையற்ற கருணையும் வெளிப்படுகின்றன அல்லவா? – சிராஜுல்ஹஸன்…

The post இறைவனே சிரித்துவிட்டான்..! appeared first on Dinakaran.

Related Stories: