இன்ஜினியரிங் கலந்தாய்வு மாணவர்கள் 9,502 பேர் கல்லூரிகளை தேர்வு செய்தனர்: சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தகவல்

சென்னை: இன்ஜினியரிங் கலந்தாய்வில் 9,502 மாணவ- மாணவிகள் தாங்கள் படிக்க வேண்டிய படிப்பு மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்தனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இன்ஜினியரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் கடந்த 10ம் தேதி முதல் 4 சுற்றுகளாக ஆன்லைனில் நடந்து வருகிறது. இதில், பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வுக்கு 14 ஆயிரத்து 546 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு முதல் சுற்று கலந்தாய்வுக்கு அதற்கான தரவரிசையில் முதல் 334 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், 9 ஆயிரத்து 502 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை உறுதி செய்துள்ளனர்.இந்த 9 ஆயிரத்து 502 பேரில், 5 ஆயிரத்து 203 பேருக்கு விருப்பம் தெரிவித்த இடங்கள், விரும்பிய கல்லூரிகள் கிடைத்துள்ளது. அவர்கள் கல்லூரில் சேர 7 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஆயிரத்து 269 பேர், தேர்வு செய்திருந்த விருப்ப இடங்களில் முதன்மை விருப்ப இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அவ்வாறு தேர்வு செய்திருக்கும் மாணவர், ஏற்கனவே ஒதுக்கீடு பெற்ற கல்லூரிக்கான இடத்துக்கு கட்டணத்தை செலுத்திவிடவேண்டும். இடைப்பட்ட 7 நாட்கள் அவகாசத்தில், இடங்களை உறுதிசெய்து கல்லூரியில் சேர்க்கை நடைமுறையில் இருப்பவர்களில் யாரும் சேரவில்லை என்றால், அந்த இடங்கள் காத்திருக்கும் மாணவர்களின் முதன்மை விருப்ப இடங்களாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் இந்த மாணவர்கள் கலந்தாய்வு விதிகளின்படி மாறி சேர்ந்து கொள்ள முடியும். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில், அழைக்கப்பட்ட 334 பேரில், 252 பேர் இடங்களை தேர்வு செய்திருக்கின்றனர். இவர்களில் 185 பேர் மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறையை தொடங்கியுள்ளனர். மீதமுள்ள 67 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர். அந்த வகையில் முதல் சுற்றுக்கான கலந்தாய்வு வருகிற 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினமே 2வது சுற்றுக்கான கலந்தாய்வும் தொடங்கி நடைபெற இருக்கிறது….

The post இன்ஜினியரிங் கலந்தாய்வு மாணவர்கள் 9,502 பேர் கல்லூரிகளை தேர்வு செய்தனர்: சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: