பழநி : பழநி, காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின. 410 ஏக்கர் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.திண்டுக்கல் மாவட்டம், பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. தொடர்மழையால் பழநி அருகே ராசாபுரம் பகுதியில் உள்ள உடையகுளம் நிரம்பி தண்ணீர் சாலைகளில் வழிந்தோடியது.
அணைகளில் இருந்தும் நீர் திறந்து விடப்பட்டிருந்ததால், தாமரைக்குளம், ராசாபுரம், கரிக்காரன்புதூர், ஒட்டணைப்புதூர், அருவங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டு தனித்தீவுகளாக மாறின. இதுபோல் பழநி அருகே வேலாயுதம்பாளையம்புதூரில் ஓடை உடைந்ததால் மழைநீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சோளம், மக்காச்சோளம், தர்பூசணி, மிளகாய் உட்பட சுமார் 100 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
310 ஏக்கர் நெற்பயிர் நாசம்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே டி.வேப்பங்குளம், தொட்டியன்குளம், அல்லிகுளம், நெடுங்குளம், கீழ காஞ்சரங்குளம் ஆகிய பகுதியில் உள்ள வயல்களில் நெற்கதிர்கள் அறுவடை நிலையில் இருந்தன.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தொட்டியான்குளத்தில் சுமார் நூறு ஏக்கரும், அல்லிக்குளத்தில் ஐம்பது ஏக்கரும், நெடுங்குளத்தில் அறுபது ஏக்கருக்கும் மேலாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அரசு மூழ்கிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குடி பகுதியில் நேற்று முன்தினம் முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் நெடுங்குளம், உடைகுளம் உள்பட பல கண்மாய்கள் நிரம்பி கரை உடைந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.