×

ஆர்எப்டி தொழில்நுட்பம் பழுதானதால் குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறியது உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

வேலூர், ஆக.22: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆர்எப்டி தொழில்நுட்பம் பழுதானதால் குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறியது. எனவே உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, கருத்தடை செய்து கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 19ம் தேதி இவரது குழந்தையை அடையாளம் தெரியாத பெண் கடத்தி சென்றார். தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய தீவிர விசாரணையில் 8 மணிநேரத்தில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குழந்தை மீட்கப்பட்டது. மேலும் குழந்தையை கடத்திய ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா(30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 2வது கணவனுக்காக கர்ப்பிணி நாடகமாடி குழந்தையை கடத்தியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உள்ள ஆர்எப்டி என்ற தொழில்நுட்பம் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தம் சுமார் 350 படுக்கையறைகள் உள்ளன. இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு 40 முதல் 50 பிரசவங்கள் வரை நடைபெறுகிறது.

அவ்வாறு பிறக்கும் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் ஒரே பதிவில் கொண்ட டேக் பொறுத்தப்படும். இது மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்எப்டி சென்சார் மூலம் கண்காணிக்கப்படும். அதாவது இந்த ஆர்எப்டி (ரேடியோ ப்ரீகுவன்சி டெக்னாலஜி அல்லது ரேடியோ ப்ரீகுவன்சி ஐடென்டிபை) டேக் பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது தாய் கட்டிடத்தை விட்டு வெளியேறினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன்மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ? அல்லது குழந்தையை கடத்தி செல்லும் சம்பவங்களோ நடைபெறாமல் தடுக்கப்படும். ஆனால் இந்த கருவி பழுதாகி உள்ளதே குழந்தை கடத்தலுக்கு காரணம் என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழைய மகப்பேறு கட்டிடத்தில் மட்டுமே இந்த ஆர்எப்டி ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை. மேலும் பழைய கட்டிடத்தில் உள்ள ஸ்கேனர் பழுதாகி பல மாதங்கள் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே குழந்தை கடத்தப்பட்டது தடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக ஆர்எப்டி ஸ்கேனரை சீர்செய்யவும், புதிய கருவிகளை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

The post ஆர்எப்டி தொழில்நுட்பம் பழுதானதால் குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறியது உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் appeared first on Dinakaran.

Tags : Vellore Government Medical College Hospital ,Vellore ,Dinakaran ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...