ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவம் வெளியேறியது: ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக கைப்பற்றியது தலிபான்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறியது. இதன் மூலம், ஆட்சி நிர்வாகம் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. விரைவில் தலிபான்கள் அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுர கட்டிடத்தை தகர்த்தனர். சுமார் 3,000 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் உலகையே அதிர வைத்தது. இதற்கு பழி வாங்க, அடுத்த ஒரே வாரத்தில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானுக்கு படையெடுத்து, அங்கிருந்த தலிபான்களையும் அல்கொய்தா தீவிரவாதிகளையும் ஓட ஓட விரட்டி அடித்தது. பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனையும் வேட்டையாடியது. அமெரிக்காவுடன் நேட்டோ படைகளும் இணைந்து ஆப்கானில் அமைதியை நிலைநாட்ட ஒன்று கூடின. ஆப்கானில் ஜனநாயக ஆட்சிக்கு அஸ்திவாரமிட்ட அமெரிக்கா, பல தேர்தல்கள் மூலம் அங்கு மக்களாட்சி மலர துணை நின்றது. ஒருபுறம் வளர்ச்சிப் பணிகளையும், மறுபுறம் தலிபான்களுடன் போரிட்டு அமைதியையும் காத்து வந்தது. இதற்காக உலக வங்கி உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளில் இருந்து பல லட்சம் கோடி பணத்தை கடன் வாங்கி செலவழித்தது. 20 ஆண்டுகளாக ஆப்கானை கட்டிக்காத்த அமெரிக்கா, ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முழுமையாக வெளியேறப் போவதாக அறிவித்த உடனேயே தலிபான்கள் ஆட்டம் ஆரம்பித்தது. அமெரிக்க படைகளிடம் பயிற்சி பெற்ற, 3 லட்சம் வீரர்கள் கொண்ட ஆப்கான் ராணுவம் எந்த எதிர்ப்பும் இன்றி தலிபான்களிடம் பணிந்தது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு ஓட, கடந்த மாதம் 15ம் தேதி ஆப்கானை தலிபான்கள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 20 ஆண்டாக அமெரிக்காவும், உலக நாடுகளும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணான நிலையில், கடந்த 2 வாரமாக ஆப்கானில் இருந்து லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களும், ஆப்கான் மக்களும் விமானம் மூலம் வெளியேறினர். இந்த இறுதி நாட்களிலும் தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் நடத்திய மனித குண்டுவெடிப்பில் 13 வீரர்களை அமெரிக்கா இழந்தது. இந்நிலையில், 31ம் தேதி கெடு முடியும் கடைசி நாளுக்கு முன்னதாகவே நேற்று முன்தினம் இரவு அமெரிக்க துருப்புகளை ஏற்றிக் கொண்டு கடைசி ராணுவ விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து விடைபெற்றது. ஆப்கானில் 20 ஆண்டுகால அமெரிக்க ராணுவத்தின் பணி முடிந்ததாக அதிபர் பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம், உலகின் மிகவும் நீண்ட கால போர் என வர்ணிக்கப்படும் ஆப்கான் போர் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 17 நாட்களில் அமெரிக்கா தனது சொந்த நாட்டு மக்கள், வெளிநாட்டவர்கள், ஆப்கானைச் சேர்ந்தவர் உட்பட 1.20 லட்சம் பேரை ராணுவ விமானங்கள் மூலம் வெளியேற்றி உள்ளது. அமெரிக்க வீரர்களுடன் கடைசி விமானம் புறப்பட்டு சென்றதும், காலியான காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விமான ஓடுபாதையில் வெற்றி நடை போட்ட தலிபான்கள், துப்பாக்கியால் வானில் குண்டு மழை பொழிந்து, பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். ஆப்கான் போருக்காக அமெரிக்கா இதுவரை ரூ.200 லட்சம் கோடியை உலக வங்கி உள்ளிட்ட நிதி அமைப்புகளிடம் இருந்து கடன் வாங்கி செலவழித்துள்ளது. இந்த கடனுக்காக வட்டியுடன் சேர்த்து ரூ.485 கோடி செலுத்த வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் 2050ம் ஆண்டுதான் கட்டி முடிக்கப்படும். இதுதவிர, ஏராளமான நவீன ஆயுதங்கள், தளவாடங்களை அமெரிக்க ராணுவம், ஆப்கானில் விட்டுச் சென்றுள்ளது. இவற்றை கைப்பற்றி உள்ள தலிபான்கள் இனி எப்படி ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பதே உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. அமெரிக்கா வெளியேறிய நிலையில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்….

The post ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவம் வெளியேறியது: ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக கைப்பற்றியது தலிபான் appeared first on Dinakaran.

Related Stories: