திருவண்ணாமலை, ஜூலை 30: ஆடி மாதம் முருகர் கோயில்களில் பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி கிருத்திகையில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் காவடி சுமந்து சென்று முருகர் கோயில்களில் செலுத்துவது வழக்கம். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டு, பால் காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடி சுமந்தும் மற்றும் வேல், அம்பு, அலகு குத்தியும் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதன்படி ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று முருகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் கிராமத்தில் உள்ள நட்சத்திரகிரி மலை மீது 27 நட்சத்திரங்களும் வழிபடும் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் பரணி உற்சவத்தை யொட்டி திரளான பக்தர்கள் காவடி எடுத்தனர். மேலும் தலைமுடி காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை ஆடி கிருத்திகையொட்டி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் முதுகில் அலகு குத்தி மர தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதேபோல் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். செய்யாறு அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண முருகர் கோயிலில் 158 பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து ஊர்வலமாக கொண்டு வந்து முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
செய்யாறில் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் உள்ள முருகர் சன்னதியில் ஆடி கிருத்திகையொட்டி முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரணமல்லூர் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்திநேர்த்தி கடன் செலுத்தினர். இதில் பெரணமல்லூர் பேரூராட்சியில் பெரிய ஏரி பகுதியில் வளர்கிரி வேல்முருகன் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தீபாரதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பெரணமல்லூர் அடுத்த தாடிநொளம்பை பகுதியில் செந்தமிழ் குன்ற திருமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் வேண்டுதல் பொருட்டு காவடி எடுத்தும், உடலில் 108 அலகுகுத்தியும், மிளகாய் பொடி அபிஷேகம் நடத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.மேலும், கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி பாலசுப்பிரமணியர் கோயிலில் ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் பக்தர்கள் வாயில் அலகு குத்தி, கிரேன் மூலம் முதுகில் அலகு குத்தினர். பலரும் பூந்தேர்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செங்கம் அருகே மண்மலை குன்றுமேட்டு பாலசுப்ரமணியர் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி விரதமிருந்த பக்தர்கள் காவடி எடுத்துச் நாவில் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். தண்டராம்பட்டு அடுத்த பழையனூர் ஊராட்சியில் உள்ள கோட்டை மலையில் உள்ள பாலமுருகர் ஆடி கிருத்திகை ஒட்டி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவண்ணாமலையில் இருந்து சோமாசிபாடி, வில்வாரணி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆடிகிருத்திகை விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரசித்தி பெற்ற முருகர் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
The post ஆடி கிருத்திகை விழா கோலாகலம்; முருகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் காவடி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.