அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

 

அரியலூர், பிப்.23: அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-24 ம் ஆண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அழகிய மணவாளன், திருமானூர், செங்கராயன்கட்டளை, கீழகாவட்டான்குறிச்சி, கரைவெட்டி, கீழக்கொளத்தூர், காமசரவள்ளி, கள்ளூர் மற்றும் விக்கிரமங்களம் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து E-KYC கொடுத்து Blue Tooth Printer கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதனடிப்படையில் முன்பதிவு செய்யப்படும். நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார்.

பதிவு உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை தூற்றி, சாக்குகளில் பிடித்து, எடை வைத்து, தைத்து, லாரியில் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10 வீதம் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: