அரசு பள்ளியில் ₹3 கோடியில் மினி விளையாட்டு ஸ்டேடியம்

சேந்தமங்கலம், அக்.21: சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளியில் ₹3 கோடியில் மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில், ஏற்கனவே விளையாட்டு ஸ்டேடியம் உள்ள 61 தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 173 தொகுதிகளில் மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க 5 ஏக்கர் முதல் 7 ஏக்கர் நிலம் வரை தேவைப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, தலைநகர் நாமக்கல்லில் மாவட்ட விளையாட்டு அரங்கம் இருப்பதால் மீதமுள்ள திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில், மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் போதிய இடவசதி உள்ளதால், அங்கு மினி ஸ்ேடடியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான கட்டுமான பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ₹3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மைதானத்தில் 200 அல்லது 400 மீ., ஓட்டப்பந்தயத்திற்கான ஓடுதளம், கால்பந்து மற்றும் கைப்பந்து, கூடைப்பந்து, கோகோ, கபடி ஆகியவற்றுக்கான மைதானம் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க கேலரி, அலுவலக அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறை, கழிவறை ஆகியவை அமைக்கப்படவுள்ளது. விளையாட்டு மைதானம் பள்ளி கல்வித்துறையின் பெயரில் உள்ளதால் அதனை விளையாட்டு துறைக்கு மாற்றம் செய்த பின்பு, மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி தொடங்கும்,’ என்றனர்.

The post அரசு பள்ளியில் ₹3 கோடியில் மினி விளையாட்டு ஸ்டேடியம் appeared first on Dinakaran.

Related Stories: