புதுடெல்லி: டிவிட்டரில் தவறாக பதவியேற்றிய டிவிட்டை மொத்தமாக நீக்காமல் அதிலுள்ள பிழையை மட்டும் திருத்தும் வசதி விரைவில் வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிவிட்டரில் பகிரப்படும் டிவிட்களையோ அதற்கு வரும் பதில் டிவிட்களையோ பயனர்கள் திருத்த முடியாது. டிவிட்டில் தவறாக ஏதாவது எழுத்துப் பிழையோ, கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ இருந்தால் அதை மொத்தமாக நீக்கிவிட்டு புதிதாகத்தான் டிவிட் செய்ய வேண்டும். எனவே, தவறுதலாக பகிரப்படும் மற்றும் பிழையோடு இருக்கும் டிவிட்களை திருத்தும் வசதியை நீண்ட காலமாகவே டிவிட்டர் பயனர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று டிவிட்டர் நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. பதிவேற்றிய டிவிட்களை திருத்த ‘அன்டூ டிவிட்’ ஆப்ஷனை கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், பதிவேற்றம் செய்யும் டிவிட்களை குறிப்பிட்ட சில நேரம் வரை திருத்தம் செய்வதற்கான வசதி வழங்கப்படும். இதை பயன்படுத்தி பயனர்கள் டிவிட்டில் உள்ள தவறுகளையோ மற்றும் கருத்துக்களையோ திருத்தலாம். ஆனால், இந்த வசதி பணம் செலுத்தி சப்ஸ்கிரிப்ஷன் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே வழங்க டிவிட்டர் முடிவு செய்துள்ளது. வழக்கமான கட்டண முறையில் குறிப்பிட்ட தொகையை கட்டும் பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட பிராந்திய பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட உள்ளதா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. இது குறித்து டிவிட்டர் நிர்வாகம், சோதனை முயற்சியில் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.