அமலாக்கத்துறையை பயன்படுத்தி பாஜக அரசு அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து அவையில் பேச வேண்டும் : மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்!!

மும்பை : அமலாக்கத்துறையை பயன்படுத்தி அதிகார அத்துமீறலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து இருப்பதாகவும் மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியை கலைக்க ஒத்துழைக்குமாறு சிலர் தன்னை அணுகியதாகவும் சிவசேனா எம்.பி. சஞ்ஜய் ராவத் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிவசேனா எம்பிக்கள், முன்னணிநிர்வாகிகள் நிர்வாகிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி துன்புறுத்துவது அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 10, 17 ஆகிய ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நிலம் விற்றவர்களை தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்குமாறு அமலாக்கத்துறை மிரட்டுவதாக கூறியுள்ள சஞ்ஜய் ராவத், மகள் திருமணத்திற்கு அலங்காரம் செய்தவர்கள் முதல் வியாபாரிகள் வரை யாரையும் விட்டு வைக்காமல் அமலாக்கத்துறை துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். சட்டவிரோதமாக இதுவரை 28 பேரை அழைத்துச் சென்று தான் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுக்குமாறு அமலாக்கத்துறை மிரட்டி இருப்பதாகவும் ராவத் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். குடும்பத்தினர், நண்பர்கள், தன்னோடு தொடர்புடையவர்கள் என பலரை அமலாக்கத்துறை குறிவைத்து மிரட்டல் விடுப்பதால் மாநிலங்களவையிலும் பொது வெளியிலும் தனது பேச்சுரிமையை பறித்து விடலாம் என நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை கலைப்பதற்கான சதியில் தானும் பங்கெடுக்க வேண்டும் என கடந்த மாதம் சிலர் அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு தான் மறுத்ததால் பகீரங்க மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை  கடிதத்தில் சஞ்ஜய் கூறியுள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை வைத்து அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது நாட்டின் ஆரோக்கியத்திற்கு கேடு என்றும் இது தொடர்பாக பேச வேண்டியது கட்டாயம் என்றும் வெங்கையா நாயுடுவுக்கு சஞ்ஜய் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். இந்த கடிதத்தின் நகல்களை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளுக்கும் அவர் அனுப்பியுள்ளார். …

The post அமலாக்கத்துறையை பயன்படுத்தி பாஜக அரசு அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து அவையில் பேச வேண்டும் : மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: