அணிவகுப்பு, ஆயுத பயிற்சி அளிக்கக் கூடாது கேரள கோயில்களில் ஆர்எஸ்எஸ்.க்கு தடை: தேவசம் போர்டு அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் தனது கட்டுபாட்டில் உள்ள சபரிமலை உட்பட அனைத்து கோயில்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்புகள் நடத்தவும், ஆயுத பயிற்சிகள் அளிக்கவும் திருவாங்கூர் தேவசம் போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் சில கோயில்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் அணிவகுப்பு, ஊர்வலம் போன்றவற்றை நடத்துகின்றனர். மேலும், அப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் ஆயுத பயிற்சியும் அளித்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தும்படி அரசிடம் புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேவசம் போர்டுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்ளிட்ட அனைத்து கோயில்களின் நிர்வாகிகளுககும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர அணிவகுப்பு நடத்தப்படுவதாகவுடும், ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு கோயில் நிர்வாக அதிகாரிகள் இனிமேல் அனுமதி அளிக்கக் கூடாது. ஆச்சாரங்கள், சடங்குகள் தவிர, ஆயுதங்களை பயன்படுத்தி எந்த பயிற்சி அளிக்கவும், கோயிலுக்கு சொந்தமான பொருட்களை பயன்படுத்தவும் ஆர்எஸ்எஸ்.சுக்கு அனுமதிக்க வழங்கக் கூடாது. மீறினால், கோயில் நிர்வாக அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டின் இந்த உத்தரவு, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: