புதுக்கோட்டை: குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இந்தியில் புதுக்கோட்டை என்று எழுதப்பட்டிருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. வழக்கமாக கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கில் நடைபெறாமல் தொழில்நுட்ப வசதிக்காக அங்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தகவல் மைய அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மத்திய தகவல் மையத்தின் துறை சார்பாக வைப்பட்டு இருந்த பேனரில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் புதுக்கோட்டை என இருந்தது.
