சென்னை: அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு பெரிய அளவில் பேரம் பேசப்படுவது நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் நியமனம் செய்வது அரசு வழக்கறிஞர்கள் பதவிகள்தான். அதாவது அரசு தரப்பில் ஆஜராக ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசு வழக்கறிஞர்கள் இருந்தால் சிக்கல் ஏற்பட்டுவிடும். அதனால் முதலில் இந்த விஷயத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், தவெக அரசு வந்து இரண்டு மாதங்களாகியும் இதுவரை முழு அளவில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கொஞ்சம் வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு சில வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முழுவ அளவில் நியமிக்கப்படாததற்கு அரசு வழக்கறிஞர்கள் பதவி விற்பனை செய்யப்படுவதே காரணம் என்று வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரசு பிளீடர், கூடுதல் அரசு பிளீடர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (சிவில்), மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (கிரிமினல்), உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அரசு பிளிடர், கூடுதல் அரசு பிளீடர்கள், குற்றவியல் வழக்கறிஞர்கள் என மொத்தம் 150 பேர் அரசு வழக்கறிஞர்கள் உள்ளனர்.
அதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்கள், தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் அரசு வழக்கறிஞர்களாக சுமார் 1100 பேர் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், இதுவரை இந்த நீதிமன்றங்களுக்கு பத்து சதவீதத்திற்கும் குறைவான வழக்கறிஞர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாமதத்திற்கு காரணம் அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் தகுதி, அனுபவம் குறித்த ஆய்வு நடைபெறுவதுதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் அரசு வழக்கறிஞர் பதவிக்கு பணம் விளையாடுவதே காரணம் என்று தெரியவருகிறது. ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கும் குறைந்த பட்சம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக உறுப்பினர்களாக இருந்து தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கட்சிக்கு மாறியவர்கள் லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்து அரசு வழக்கறிஞர்கள் பதவியை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் அரசு வழக்கறிஞர் பதவியை வாங்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தவெகவுக்கு வழக்கறிஞர்கள் படையெடுத்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு பதவி வாங்குவதற்காக லட்சக்கணக்கில் பணத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். பலர் ஏற்கனவே பணத்தை கொடுத்த பதவிகளையும் வாங்கி விட்டனர்.
தற்போது தரப்படும் அரசு வழக்கறிஞர் பதவி வெறும் 6 மாதத்திற்கான தற்காலிக பதவிதான் என்று துறை அமைச்சர் கூறியுள்ளார். அரசு வழக்கறிஞர் நியமன அரசாணைகளிலும் தற்காலிக பணிதான், எந்த நேரத்திலும் பதிவியிலிருந்து முன் அறிவிப்பு இல்லாமல் நீக்கப்படலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் 6 மாத தற்காலிக பதவிக்கு லட்சக் கணக்கில் பணத்தை கொடுக்க முன்வருவார்களா?.
ஒருவேளை தற்காலிக பணியாக இருந்தாலும் கொடுத்த பணத்தை எப்படி சம்பாதிப்பது என்ற கேள்வியும் எழுகிறது. அதனால், தற்காலிகம் என்பது பெயரளவுக்குத்தான் என்பது தெரிகிறது. இந்த பண பேரத்தில் கட்சியின் மிக முக்கிய பிரமுகருக்கு முழு தொடர்பு உள்ளதாகவும், அவர் பெயரை சொல்லியே பணம் வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
