சிவகங்கை: சிவகங்கை நகராட்சி கமிஷனரின் சேரில் அமர்ந்த தவெக எம்எல்ஏவிற்கு, நகர்மன்றத் தலைவர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் தவெக எம்எல்ஏ குழந்தைராணி நாச்சியார் சென்றார். அவர், கமிஷனர் அறைக்கு சென்று கமிஷனர் அமர்ந்திருந்த சேரில் இருந்து அவரை எழுந்திருக்க செய்து விட்டு, அதில் அமர்ந்து ஆய்வு செய்தார். எம்எல்ஏவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் சார்பில், வழக்கறிஞர்கள் அழகர்சாமி, கோதண்டராமன் ஆகியோர் எம்எல்ஏ குழந்தைராணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ‘‘நகராட்சி கமிஷனர் என்பவர் நகராட்சி நிர்வாகத் துறையால் நியமிக்கப்படும் ஒரு அரசு அதிகாரி. அவரது இருக்கை குறிப்பிட்ட நிர்வாக பதவிக்குரியது. சட்டப்பேரவை உறுப்பினர் என்பவர் மக்கள் பிரதிநிதி.
நகராட்சி எல்லைக்குள் உள்ள வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால், நகராட்சி அலுவலகத்திற்கு வரும் போது, அவருக்கென ஒதுக்கப்படும் தனி அறையிலோ அல்லது பார்வையாளர் அரங்கிலோ அமர்ந்துதான் அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டும். அரசு அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து உத்தரவிடுவது நிர்வாக நெறிமுறைகளுக்கு எதிரானது.
காணொளி வாயிலாக நடைபெற்ற உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த நகராட்சி ஆணையாளரை எழச் செய்து அவரது இருக்கையில் அமர்ந்தது கண்டனத்துக்குரியது. இச்செயல் நிர்வாக நெறிமுறைகளுக்கும், ஜனநாயக பண்புகளுக்கும் எதிரானது. இச்செயலுக்கு பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
