கோவை: அதிகாரமும் அந்தஸ்தும் கைநிறைய இருந்தாலும், தலைக்கனம் இல்லாமல் எளிய மனிதர்களாக வாழ்பவர்களை இந்த உலகம் எப்போதும் உற்று நோக்கிக்கொண்டே இருக்கிறது. பந்தா இல்லாத இத்தகைய அதிகாரிகளின் யதார்த்தமான செயல்பாடுகள், சாமானிய மக்களை எளிதில் ரொம்பவே கவர்ந்து விடுகின்றன. அதனால்தான், தங்களின் எளிமையால் தனித்து தெரியும் மனிதர்கள் குறித்த செய்திகள், இணையத்தில் அடிக்கடி பேசுபொருளாகி வைரலாகி விடுகின்றன.
அந்த வகையில், கோவையில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதி சிவக்குமார் என்பவரின் எளிய வாழ்க்கை முறையும், அரசு பணியும் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 53 வயதாகும் நீதிபதி பி.கே.சிவகுமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், இதற்கு முன்பு சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் திறம்பட பணியாற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், இவர் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, கோவை மாவட்ட 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இப்போது பணியாற்றி வருகிறார். நீதிபதி சிவக்குமார் தற்போதைய காலக்கட்டத்திலும் மிக எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து காட்டி வருகிறார். காஸ்ட்லி வாகனங்களை பயன்படுத்தாமல், தினமும் கோர்ட்டுக்கு தனது சைக்கிளிலேயே வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். வீட்டிலிருந்து மதிய சாப்பாடு எடுத்து வரும் அவர், தனியாக உட்கார்ந்து சாப்பிடாமல் நீதிமன்ற ஊழியர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து எந்த பாகுபாடும் இல்லாமல் உணவு சாப்பிடுகிறாராம்.
நீதிமன்ற வளாகத்தில் எப்போதுமே தனியாக நடந்து செல்லும் குணம் கொண்டவரான இவர், தனக்கு பின்னால் டவாலி, பிரத்யேக அங்கி அணிந்துகொண்டு வரக்கூடாது என்கிறார். சேவகர்கள் யாரும் தன்னுடன் வருவதை ஒருபோதும் விரும்பியதே இல்லையாம். நீதிபதியின் இந்த யதார்த்தமான செயல்பாடுகள், அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மக்களுடன் எவ்வளவு எளிமையாக பழக வேண்டும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணமாகி இருக்கிறது.
