×

இடுக்கியில் சிறுநீரக கோளாறால் உயிரிழந்த யாசகரின் சாக்குப் பையில் கட்டுக்கட்டாக பணம்

*உடல் அடக்கத்திற்கு பின் போலீசார் கண்டு பிடிப்பு

திருவனந்தபுரம் : இடுக்கியில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த யாசகர் வைத்திருந்த சாக்குப் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு பகுதியை சேர்ந்தவர் சசி (64).

இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. ஆனால் அவருடன் நெருக்கம் எதுவும் கிடையாது. சசி கடந்த பல வருடங்களாக அப்பகுதியில் உள்ள கல்யாண மண்டபங்கள்,கோயில்கள், சர்ச்சுகள் ஆகிய இடங்களுக்கு சென்று பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.

பெரும்பாலும் கடைத் திண்ணையிலோ அல்லது பஸ் ஸ்டாப்பிலோ தான் படுத்து தூங்குவார். ராஜாக்காடு பகுதியில் உள்ள அனைவருக்கும் சசியை தெரியும். இதனால் பலரும் அவருக்கு அடிக்கடி சாப்பாடோ, பணமோ கொடுப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சசியின் முகம் வீங்கி இருப்பதை பார்த்த ராஜாக்காடு பஞ்சாயத்து துணைத்தலைவர் பென்னி, அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சசியை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சசி நேற்று முன்தினம் மரணமடைந்தார்.தொடர்ந்து அவரது உடல் ராஜாக்காடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரும்பாலும் ராஜாக்காடு டவுனில் உள்ள ஒரு நகைக்கடையை ஒட்டியுள்ள படிக்கட்டுக்கு அடியில் தான் சசி படுத்திருப்பார். இவர் எப்போதும் ஒரு சாக்குப்பையை வைத்திருப்பார்.

ராஜாக்காடு போலீசார் முன்னிலையில் அந்தப் பையை பரிசோதித்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிப் பார்த்தபோது 1,15,751 ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தை சசியின் நெருங்கிய உறவினரிடம் ஒப்படைக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.

Tags : Thiruvananthapuram ,Yazagar ,Sasi ,Rajakkad district ,Idukki district ,
× RELATED டெல்லியில் 52வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது