புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோரை தேசிய கல்வி வாரியத்தில் இருந்து இடமாற்றம் செய்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதற்கான ஓஎஸ்எம் தொழில்நுட்ப சேவை கொள்முதல் நடவடிக்கை குறித்து விசாரிக்க ஒருநபர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 13ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, வழக்கத்திற்கு மாறாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அதில், பலரது ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் மங்கலாக இருப்பதாகவும், விடைத்தாளின் பல பக்கங்கள் விடுபட்டிருப்பதாகவும், விடைத்தாள்களே மாறியிருப்பதும் என பல குளறுபடிகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதற்கு, சிபிஎஸ்இ இம்முறை விடைத்தாள்களை திருத்த அறிமுகப்படுத்திய ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) எனும் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையை காரணம் என மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம்சாட்டினர். விடைத்தாள்களை ஆசிரியர்கள் நேரடியாக திருத்துவதற்கு பதிலாக, அவை ஸ்கேன் செய்யப்பட்டு கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதற்கான சேவையே ஓஎஸ்எம் முறையாகும்.
இதற்கான சோதனை முயற்சிகளின் போது, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல தொழில்நுட்ப குறைபாடுகளை சுட்டிக்காட்டிய போதிலும், சிபிஎஸ்இ நிர்வாகம் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் ஓஎஸ்எம் முறையை கொண்டு வந்ததால் 17 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக நாடு முழுவதும் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, ஓஎஸ்எம் தொழில்நுட்பத்தை எளிதாக ஹேக் செய்யும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை 12ம் வகுப்பு மாணவர் ஒருவரே கண்டறிந்து சமூக ஊடகங்களில் அமல்படுத்தினார். மேலும், ஓஎஸ்எம் சேவைக்கான ஒப்பந்தத்தை பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த கோஎம்ட் எஜூகேட் நிறுவனத்தின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுமட்டுமின்றி, மறுமதிப்பீட்டிற்காக சிபிஎஸ்இ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்ற போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு விண்ணப்ப கட்டணம் ரூ.69,000 என தாறுமாறாக காட்டியதும் சர்ச்சையானது. ஏற்கனவே நீட் வினாத்தாள் கசிந்ததாக, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடக்க இருக்கும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வையும் நியாயமாக நடத்த முடியாத ஒன்றிய அரசின் திறமையின்மை இளம் தலைமுறையினர் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. நாடாளுமன்ற நிலைக்குழுவும் இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் தேசிய கல்வி வாரியத்தில் இருந்து இடமாற்றம் செய்து ஒன்றிய அரசு நேற்று நடவடிக்கை எடுத்தது.
இதுதவிர, ஓஎஸ்எம் சேவைகளை கொள்முதல் செய்வது தொடர்பான விஷயங்களை விசாரிக்க திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ். ராதா சவுகான் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அமைச்சரவைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், தேவைக்கேற்ப மற்ற துறை அதிகாரிகளின் உதவியைப் பெறுவதற்கு சவுகானுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இக்குழு தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் சமர்ப்பிக்கும். ஒன்றிய கல்வி அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டுமென்ற குரல்கள் வலுத்து வரும் நிலையில், அதிகாரிகளின் இடமாற்றம் திசை திருப்பும் நடவடிக்கை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்துவதில் குளறுபடி குறித்து தினகரன் நாளிதழ் நேற்று விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் தந்த மாணவன்
ஒன்றிய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக, 12ம் வகுப்பு மாணவர் சர்தக் சித்தாந்த் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். இவர் தான் ஓஎஸ்எம் டெண்டரில் நடந்த விதிமுறை முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர். இவர் நாடாளுமன்ற குழுவிடம், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங், பள்ளி கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் மற்றும் கல்வி அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் தனது விளக்க அறிக்கையை சமர்பித்தார்.
இதற்கு பதிலளித்த சிபிஎஸ்இ அதிகாரிகள் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், மாணவர்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை சமர்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் எழுப்பியுள்ள கவலைகளை பரிசீலிப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
* புதிய வெப்சைட்டிலும் கடும் சைபர் தாக்குதல்
நேற்று செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மறுமதிப்பீட்டு இணையதளத்தின் சேவையை சீர்குலைக்க தீய நோக்கமுடைய நபர்கள் தொடர் சைபர் தாக்குதல்களை நடத்தியதாக சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இந்த இணைய தளம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அடுத்த 2 நிமிடத்திற்குள் 15 லட்சம் அணுகல் முயற்சிகளும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிககப்படாத கோப்பு அணுகல் முயற்சிகளும் நடந்ததாக கூறி உள்ளது.
ஆனாலும் இந்த இணையதளம் ஒரே நேரத்தில் 8,000க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு சேவையளித்து வருவதாகவும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 16,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை வெற்றிகரமாக சமர்பித்துள்ளதாகவும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* மறுமதிப்பீடு வெப்சைட் செயல்பாட்டிற்கு வந்தது
மாணவர்கள் விடைத்தாள்களை சரிபார்க்கவும், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவும் சிபிஎஸ்இ கொண்டு வந்த பிரத்யேக இணையதளத்திலும் கடுமையான தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன. ஒரே நேரத்தில் பல மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் இந்த இணையதளம் முடங்கியது. இதனால் மே 29 வரை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப பிரச்னைகள் இல்லாத வகையில் புதிய இணையதளம் ஜூன் 1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என சிபிஎஸ்இ அறிவித்தது.
அதன்படி, சரி செய்யப்பட்ட மறுமதிப்பீட்டிற்கான இணையதளம் நேற்று செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதில், ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. வரும் 6ம் தேதிக்குள் விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* புதிய தலைவர் நியமனம்
சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் அதிரடி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகன்டே பிரசாந்த் சீதாராமையும், செயலாளராக வருண் பரத்வாஜையும் நியமித்து ஒன்றிய அரசு நேற்றிரவு உத்தரவிட்டது.
