×

திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதியில் பலத்த சூறைக்காற்றால் உதிர்ந்த மாங்காய்கள்; வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை

திருத்தணி: ஆண்டு முழுவதும் விவசாயிகள் உழைப்பால் அறுவடைக்கு வந்த மா சாகுபடி சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் குவியல் குவியலாக கொட்டியதால், போதிய விலையின்றி நிலத்திற்கு உரமாக்கும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், நெல், கரும்புக்கு அடுத்தப்படியாக விவசாயிகள் மா அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா தோட்டங்களில் நடப்பு ஆண்டு கணிசமான விளைச்சல் கண்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் மா அறுவடை தொடங்கியது. ஆரம்பத்தில் டன் ரூ.30 ஆயிரம் வரை இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மே மாத இறுதி வாரத்தில் மா அறுவடைக்கு பெரும்பாலான விவசாயிகள் ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருத்தணி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் குவியல் குவியலாக மரத்தில் இருந்து கொட்டியது.

குறிப்பாக, பள்ளிப்பட்டு பகுதியில் பேட்டை கண்டிகை, ராமாநாயுடு கண்டிகை, சி.என்.கண்டிகை, நெடியம், சாமந்தவாடா, கீச்சலம், நொச்சிலி, கிருஷ்ணமராஜ்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மா தோட்டங்களில் மாங்காய் குவியலாக கொட்டியது. இதேபோல், திருத்தணி ஒன்றியத்தில் பீரகுப்பம், கே.ஜி.கண்டிகை, நரசிங்கபுரம், வி.கே.என்.கண்டிகை, டி.சி.கண்டிகை, தாடூர் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மாங்காய் கொட்டியது. திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியத்தில் மா தோட்டங்களில் குவியல் போல் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் மற்றும் பழங்கள் கொட்டியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் வரை ரகத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் மொத்த வியாபாரத்தில் ரூ.20 முதல் 35 வரை விற்பனை செய்யப்பட்ட மா காற்றின் வேகத்திற்கு ஏராளாமான தோட்டங்களில் உதிர்ந்ததால், தற்போது மார்க்கெட்டில் இந்த கொட்டிய மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், குறைந்தபட்சம் தோட்டத்தில் கொட்டிய மாங்காய் கூலி ஆட்கள் மூலம் சேகரித்து டிராக்டர், லாரியில் ஏற்றிச் செல்லவும் கூலி கட்டுபடி ஆகாததால், தோட்டத்தில் கொட்டியுள்ள மாங்காய் அப்படியே விட்டு டிராக்டர் மூலம் உழுது நிலத்திற்கு உரமாக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருத்தணி வட்டார தமிழக விவசாயிகள் சங்க தலைவர் லிங்கமூர்த்தி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, மா விளைச்சல் அதிகரித்து விலை கடுமையாக சரிந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு மா விளைச்சல் குறைவாக இருந்ததால், ஆரம்பத்தில் விலை ஓரளவுக்கு அதிகரித்து கணிசமான வருவாய் கிடைக்கும் என்று மா விவசாயிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், திடீரென்று சூறைக்காற்று வீசியதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மா கொட்டி குறைந்தபட்ச விலையும் போகாததால், அதனை உரமாக மாற்றும் நிலை உள்ளது. எனவே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள மா விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு கிலோ மாங்காய்க்கு மானியமாக ரூ.5 வழங்க முன்வரவேண்டும், மா விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை தடுக்க திருத்தணியில் மாம்பழ கூழ் ஆலை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags : Trithani ,Skolabat ,Patrithani ,THIRUVALLUR DISTRICT ,SUGARCANE ,
× RELATED சென்னை மெரினா கடலில் குளித்தபோது...