ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள், இத்தாலியின் ரோம் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் மோதினர். முதல் செட்டில் அட்டகாசமாக ஆடிய எலினா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
2வது செட்டில் சுதாரித்து ஆடிய இகா, 6-2 என்ற புள்ளிக கணக்கில் எளிதில் வென்று சமன் செய்தார். அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய எலினா, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய எலினா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், ரொமேனியோ வீராங்கனை ஸொரானா கிறிஸ்டியா மோதினர். அப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய கோகோ காஃப், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அசத்தினார். அதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் கோகோ காஃப், எலினா ஸ்விடோலினா மோதவுள்ளனர்.
