மும்பை: தென்னிந்தியத் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழும் சிம்ரன், சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தி திரையுலகின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக நடிகர் துல்கர் சல்மான் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்களும், பாலிவுட் படப்பிடிப்புத் தளங்களில் அடிப்படை மரியாதை பெறுவதற்கே தாங்கள் பெரிய நட்சத்திரம் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டியிருந்தது எனப் புகார் தெரிவித்து இருந்தனர்.
அந்த வரிசையில் தற்போது சிம்ரன் பேசுகையில், ‘இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தென்னிந்திய நடிகர்களின் உழைப்பையோ அல்லது அவர்கள் பல ஆண்டுகளாகக் கட்டிக்காக்கும் நற்பெயரையோ கண்டுகொள்வதில்லை. நான் எனது வாழ்க்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான காலத்தைச் சினிமாவிற்காகச் செலவிட்டுள்ளேன். அப்படி இருந்தும் உரிய மரியாதை கிடைக்காதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. பாலிவுட் தயாரிப்பாளர்கள் தென்னிந்திய நடிகர்களுக்கான அடிப்படை வசதிகளில் கூட பேரம் பேசுகின்றனர்.
தங்கும் வசதி, விமான டிக்கெட் மற்றும் உதவியாளர்கள் எண்ணிக்கையில் கூட கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். இத்தனை உதவியாளர்களை அழைத்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். அதனால் அங்கு பணியாற்றப் பிடிப்பதில்லை. இதனாலேயே பல இந்திப் பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளேன்’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.
