×

மொழி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கான இந்தி தேர்வுக்கு தடை: கடும் எதிர்ப்பால் பாஜக அரசு பின்வாங்கியது

 

மும்பை: மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான இந்தி மொழித் தேர்வை மாநில அரசு அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2025ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் இந்தி மொழியை மூன்றாவது பாடமாக கட்டாயமாக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிப்., மாதம் பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு, பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்தது. மாநில அரசு கடந்த ஏப்., 18ம் தேதி வெளியிட்ட புதிய அரசாணையில், மராத்தி மொழியை கட்டாய பாடமாக நடத்தாத பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தது.

மேலும் மே 1ம் தேதி முதல் டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் உரிமத்தை தக்கவைக்க மராத்தி மொழித் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் கட்டாயமாக்கினார். இந்நிலையில் நேற்று, 10ம் வகுப்பு வரை இந்தி பயிலாத அரசு அதிகாரிகளுக்கு ஜூன் 28ம் தேதி இந்தி மொழித் தேர்வு நடத்தப்படும் என மொழி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது இந்தி மொழியை பின்வாசல் வழியாக திணிக்கும் முயற்சி என்று போராட்டங்கள் வெடித்த நிலையில், இன்று நடக்கவிருந்த இந்தத் தேர்வை நிறுத்தி வைப்பதாக மராத்தி மொழித் துறை அமைச்சர் உதய சமந்த் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அரசு ஊழியர்களுக்கு இந்தித் தேர்வு நடத்தும் 1976ம் ஆண்டின் விதிமுறை தற்போதைய சூழலுக்கு தேவையா அல்லது அதை முழுமையாக ரத்து செய்யலாமா என்பது குறித்து அரசு ஆய்வு செய்யும்’ என்று தெரிவித்தார். இருப்பினும், 50 ஆண்டுகால இந்த பழைய விதிமுறையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என மராத்தி மொழி ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : BJP government ,MUMBAI ,STATE GOVERNMENT ,
× RELATED தமிழக முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்?