×

பலாத்கார புகார் சமரசத்தில் முடிந்த நிலையில் நஷ்டஈடு கேட்டு நடிகர் மீது நடிகை வழக்கு: ஹாலிவுட்டில் பரபரப்பு

 

நியூயார்க்: திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு இடையேயான சட்டப் போராட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஹாலிவுட் படமான ‘இட் எண்ட்ஸ் வித் அஸ்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை பிளேக் லைவ்லி மற்றும் நடிகர் ஜஸ்டின் பால்டோனி ஆகியோருக்கு இடையே கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மோதல் வெடித்தது. அப்போது ஜஸ்டின் பால்டோனி மீது பிளேக் லைவ்லி பாலியல் பலாத்கார புகார்களைச் சுமத்தி நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த சட்டப் போராட்டம், பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு கடந்த 4ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், சமரச ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரும் பிளேக் லைவ்லி, மீண்டும் பால்டோனியிடமிருந்து நஷ்டஈடு கோரி புதிய நீதிமன்ற ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். பணியிடத்தில் நடக்கும் பாலியல் பலாத்கார புகார்களைத் தெரிவிப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கலிபோர்னியா சட்டத்தைப் பயன்படுத்தி அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இது குறித்து பால்டோனியின் நண்பரும் நடிகருமான ஆடம் மொண்ட்ஷைன் பேட்டியில் கூறுகையில், ‘பிளேக் லைவ்லியின் இந்தச் செயல் விளக்க முடியாத ஒன்றாகவும், எனது நண்பரை மிகவும் காயப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த வழக்கால் பால்டோனியின் குடும்பம் மற்றும் குழந்தைகள் பொதுவெளியில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Hollywood ,New York ,Blake Lively ,Justin Baldoni ,
× RELATED மேற்குவங்க எஸ்ஐஆர் விவகாரங்களை...