நன்றி குங்குமம் தோழி
ஒரு மனிதன் தன் அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாற்பட்டு தனக்கு விருப்பமான பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறான். அந்த செயல் நேர்மறையானதாகவும் எதிர்மறையானதாகவும் இருக்கலாம். ஒரு செயலில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு நாளடைவில் அதற்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பதின்பருவ வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஏதோவொரு பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை இழந்துவிடுகின்றனர்.
தீவிர விளையாட்டு, மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள் போன்றவற்றின் அடிமைத்தனத்தில் சிக்கியவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி அவரை சார்ந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் அதன் தாக்கம் தொடரவே செய்கிறது. குடும்பத்தில் பொருளாதார பின்னடைவும் ஏற்படுகிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஒன்றை நடத்தி வருகிறார் சரண்யா. ஒரு பெண்ணாக இந்த துறையில் பயணிப்பது சவால்கள் நிறைந்தது என்றாலும் மறுவாழ்வு மையத்தில் வருபவர்களை குணப்படுத்தி, ஆதரவின்றி இருப்பவர்களுக்கு தங்குமிடம் அமைத்து வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார் சென்னை ரெக்கவரி ஹோம் ஃபவுண்டேஷன் எனும் மறுவாழ்வு மையத்தின் நிறுவனர் சரண்யா.
“மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து வருகிறோம். 2015-ம் ஆண்டு முதல் மறுவாழ்வு மையங்களில் (Rehabilitation Centers) இன்சார்ஜ் மற்றும் கவுன்சிலிங் தருபவராகப் பணியாற்றியிருக்கிறேன். சமூகப் பணியில் முதுகலை (MSW) முடித்த பின்னர், ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபோது ஊதியப் பிரச்னைகள் இருந்தன.
மேலும், நான் சொந்தமாகச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த மையத்தைத் தொடங்கினேன். இது ஏற்கனவே 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஒரு மையம். இதன் முந்தைய உரிமையாளருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக பின்னர் நான் இந்த மையத்தின் நிறுவனரான முழு பொறுப்பையும் ஏற்று நடத்தி வருகிறேன்.
இங்கு மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது ஒரு தனிநபர் பணி அல்ல, மாறாக மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், செவிலியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அடங்கிய ஒரு கூட்டு முயற்சி. முதல் கட்டமாக 21 நாட்கள் சிகிச்சை, அதில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு உடல்ரீதியான முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுமார் 90 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது அவர்களுக்கு ஒரு தெளிவைத் தரும். யோகா, உடற்பயிற்சி, தியானம் மற்றும் ஆலோசனைகள் மூலம் அவர்கள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள்.
மறுவாழ்வு மையம் என்றாலே அடிப்பார்கள், சித்ரவதை செய்வார்கள் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால், இங்கு அன்பான கவனிப்பே பிரதானமாக இருக்கிறது. போதைப் பழக்கம் நோயல்ல… ஆனால், அதை வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். போதைக்கு அடிமையானவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து ஒரு வாழ்க்கைத் துணையை அமைத்து தருகிறார்கள்.
ஆனால், அது வாழ்க்கையில் மேலும் பல சிக்கல்களை உருவாக்கும். ஒருவர் போதைக்கு அடிமையாவதால் அதிகம் பாதிக்கப்படுவது அந்த வீட்டின் பெண்களும் குழந்தைகளும்தான். கணவனின் குடிப் பழக்கத்தால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் சிதைந்து போகும் பெண்களுக்கும் நாங்கள் ஆலோசனைகளை வழங்குகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு சிகிச்சைக்கான கட்டணக் குறைப்பையும் செய்கிறோம்” என்றவர், போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வருகிறவர்களுக்கு புதுமையான முயற்சிகளை காட்டுகிறார்.
“போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர்கள் மீண்டும் அதே சூழலுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காக, மையத்திற்கு எதிரிலேயே அவர்களுக்குத் தங்கும் இடம் அமைத்துள்ளோம். பராமரிப்பு வசதிகளும் உணவும் வழங்கி, அவர்கள் வேலைக்குச் செல்லவும் உதவுகிறோம். இங்கு வருகிறவர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். தற்போது எங்கள் தங்குமிடத்தில் பொறியாளர்கள், அரசுப் பணியாளர்கள் உட்படச் சிலர் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். மையம் செயல்படுவது மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகிறோம். தற்போது 18 வயது இளைஞர்கள் கூட போதைப்பழக்கங்களுக்கு ஆளாகி வருவது கவலையளிக்கிறது.
பெண்களும் தற்போது இத்தகைய பழக்கங்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. நன்கு படித்த அறிவார்ந்தவர்கள் பலரும் இதுபோன்ற போதைக்கு அடிமையாவதை பார்க்க முடிகிறது. நான் பார்த்த வரையிலும் சிலர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பார்கள். ஆனால், அவர்களிடையே ஏதோவொரு அடிமைத்தனம் இருப்பதாக வருவார்கள். இவர்களை மீட்கத் தீவிரமான கவுன்சிலிங் மற்றும் உளவியல் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. நமது முயற்சி ஒருவரின் வாழ்க்கையையும் அவரது குடும்ப நிலையையும் மாற்றும் என்ற நம்பிக்கையுடன் இந்த சேவைப் பயணத்தை தொடர்கிறேன்” என்கிறார் சரண்யா.
