நன்றி குங்குமம் தோழி
டாப் 10 இணையதளங்கள்
ஜனவரி மாதத்தில் எந்தெந்த இணையதளங்களுக்கு மக்கள் அதிகமாக விசிட் அடித்திருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. அதிக முறை விசிட் அடிக்கப்பட்ட இணையதளங்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது, கூகுள். 9,480 கோடி முறை கூகுள் தளத்துக்கு விசிட் அடித்திருக்கின்றனர். அடுத்து, 4,970 கோடி விசிட்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, யூடியூப். மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது, ஃபேஸ்புக். கடந்த ஜனவரியில் மட்டும் 950 கோடி முறை ஃபேஸ்புக்குக்கு விசிட் அடித்திருக்கின்றனர். 610 கோடி விசிட்களுடன் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது இன்ஸ்டாகிராம்.
கூகுள், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நான்கு தளங்களுமே மக்கள் மத்தியில் சில வருடங்களாக புழக்கத்தில் இருப்பவை. இந்தத் தளங்களுக்கு இவ்வளவு விசிட்கள் கிடைத்திருப்பது ஆச்சர்யமில்லை. இந்நிலையில் புதிதாக நுழைந்து, அதிக விசிட்டுகளை பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கிறது சாட்ஜிபிடி. ஆம்; கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே 550 கோடி முறை சாட்ஜிபிடிக்கு விசிட் அடித்திருக்கின்றனர். அதிக முறை விசிட் அடிக்கப்பட்ட தளங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறது சாட்ஜிபிடி.
நம்பர் ஒன் இன்ஸ்டா பிரபலம்
சமீபத்தில் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் பட்டியல் வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 67.2 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதற்கடுத்து மூன்றாம் இடத்தில் அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான மெஸ்ஸி உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 51.1 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
அமெரிக்க நடிகையும், பாடகியுமான செலினா கோமஸ், 41.5 கோடி ஃபாலோயர்களுடன் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற மாடலும், பிசினஸ் வுமனுமான கைலி ஜென்னர் ஐந்தாம் இடத்தில் உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 39 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அப்படியென்றால் முதல் இடத்தில் யார் இருக்கிறார் என்கிறீர்களா? இன்ஸ்டாகிராமின் அக்கவுன்ட்தான் முதலிடத்தில் உள்ளது. இன்ஸ்டாகிராமின் கணக்கை 70 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
பார்வையற்றவர்களுக்கான பயணம்
‘ரைசிங் ஸ்டார் கிள்தே செஹ்ரே’ என்ற அமைப்பு, கடந்த 2019ம் வருடம் முதல் 1,700க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களை துபாய், ரிஷிகேஷ், ஜிம் கார்பெட், அயோத்தி, கோவா, முசோரி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 16 இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதில் பங்கேற்றவர்களில் 28 முதல் 35 சதவீதம் பேர் மீண்டும் மீண்டும் பயணங்களில் கலந்து கொள்கின்றனர். முக்கியமாக கடந்த பிப்ரவரி 11 முதல் 15ம் தேதி வரை நடந்த தாய்லாந்து பயணம் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
இந்த அமைப்பு 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த இந்த தன்னார்வலர்கள் பார்வையற்றவர்கள் மற்றும் பயணம் குறித்து நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2026ம் வருடத்துக்காக இந்த அமைப்பினர் ஒரு லட்சியத் திட்டத்தை வைத்துள்ளனர். அதாவது, இந்த வருடத்தில் ஐந்து சர்வதேசப் பயணங்கள் மற்றும் பத்து இந்திய அளவிலான பயணங்களை மேற்கொள்வதுதான் அந்த லட்சிய திட்டம்.
தொகுப்பு: த.சக்திவேல்
