×

மருந்து கூட விருந்தாகும்!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்

தூய்மையும் ஆரோக்கியமும் நிறைந்த இடமே நம்முடைய மனதினை அமைதிப்படுத்தும். அது அனைத்து செயல்களையும் உற்சாகத்துடன் செய்யத் தூண்டும். அதனால்தான் அந்த இடத்தில், நாம் பத்தியமாக சாப்பிட்டாலும் விருந்து உணவுப் போல் ருசிக்கும். இப்பொழுது புரிந்திருக்கும், வீட்டின் எந்த இடம் இத்தகைய சிறப்பைப் பெற்றது என்று. அது நம் வீட்டின் இதயமாக இருக்கும் சமையல் அறையேதான். இதயத்தை பாதுகாக்க எந்தளவு முக்கியத்துவம் தருவோமோ, அந்தளவுக்கு சமையலறையின் அமைப்பில் அதிக அக்கறை செலுத்துவோம். காரணம், ஆசையாக சமைத்து, அன்புடன் பரிமாறி, இன்முகத்தோடு உபசாரம் செய்யும் பொழுது, நம்மையறியாமல் கொஞ்சம் அதிகமாகவே சுவைக்கத் தோன்றும். நம் உடலும் உள்ளமும் குளிர, ஆரோக்கிய வாழ்வு பெற உணவுதானே முக்கியம்.

உயிரைக் காக்கும் உணவு தயாரிக்கப்படும் இடமே நம் சமையலறை. அவ்வாறு அங்கு சமைக்கப்படும் உணவினை மனப்பூர்வமாக விரும்பி சமைக்கும் ேபாதுதான் நம் மனதில் சந்தோஷம் பிரதிபலிக்கும். அந்த சந்ேதாஷம் உணவின் ருசியில் வெளிப்படும். உற்சாகமாக சமைக்க சமையல் அறையும் அதற்கு ஏற்ப அமைக்க வேண்டும். சமைக்க வேண்டும் என்ற ஆவலை தூண்ட வேண்டும். குறிப்பாக பொருட்களை சுலபமாக எடுத்து சமைக்கும் படி அமைத்திருக்க வேண்டும். வேலை செய்யும் பொழுது உடல் சோர்வு ஏற்படாத அளவுக்கு காற்றோட்டம் வேண்டும். தரை வழுக்காமல் இருக்க வேண்டும். பாத்திரங்கள், பொருட்கள் வைக்கப்படும் டப்பாக்கள் முதல் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க வேண்டும்.

எவ்வளவுதான் சிறிய வீடாக இருந்தாலும் சமைப்பதற்கு தனி இடம் அவசியம். குறைவான நேரத்தில் நிறைய வேலைகளை அல்லது முழு சமையல் வேலைகளையும் முடிக்கும் படி இருக்க வேண்டும். சமைக்கும் இடத்தில் பொருட்களை தேடித் தேடி எடுக்கும் சூழல் ஏற்படாதவாறு அமைக்க வேண்டும். சமையலறையை பொறுத்தவரை அதனை பயன்படுத்துபவரின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்க வேண்டும். சமையல் அறை பெரியதாக இருந்தால், ‘U’ வடிவில் அமைக்கும் போது இடம் தாராளமாக இருக்கும். நீள மேடை இருந்தால், நிறைய ‘எலெக்ட்ரானிக்’ பொருட்களை அழகுற அமைக்கலாம். ‘ட’ வடிவ அறையாக இருந்தாலும், இடத்தை அடைக்காதவாறு பொருட்களை நம் ரசனைப்படி வைத்துக் கொள்ள முடியும்.

இரட்டைச் சுவர் கொண்ட சமையலறைகளும் உண்டு. அடுக்குமாடிக் கட்டடங்களில் ‘மாடுலர் கிச்சன்’ அமைப்பினைதான் பொருத்துகிறார்கள். காரணம், சிறிய இடத்தில் பொருட்கள் அனைத்தையும் வெளியே தெரியாதவாறு அழகுற அமைக்கலாம். வெளிநாடுகளில் பெட்டி போன்ற அமைப்பில் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், அவர்களின் சமையல் முறையே வேறு. சமைப்பதும் குறைவாகவே இருக்கும்.

அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற எளிய உணவு முறைகள், பச்சைக் காய்கறிகள், கடையில் வாங்கி சூடுபடுத்தி சாப்பிடும் உணவு வகைகள் என சுலபமான சமையல் முறைகளை அவர்கள் பின்பற்றுவதால், அழகான அமைப்புக்கு முதலிடம் தருகிறார்கள். நம்முடைய உணவுப்பழக்கத்தில் பாத்திர-பண்டங்கள் அதிகமாக பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. அதாவது, அரைக்க, பொடிக்க என உணவுக்கு ஏற்ப சாதனங்கள் தேவைப்படுகிறது. அம்மிக்கல்லும், ஆட்டுக் கல்லும் வராண்டாவில் கிடந்த காலங்கள் மாறி, மின் உபகரணங்களாக அனைத்தும் மேடையை அலங்கரிக்க வந்துவிட்டன. அத்தகைய உபகரணங்களுக்கு பார்த்து பார்த்து ‘பாயின்ட்’ வைக்க வேண்டும்.

சமையல் அறை அமைக்கும் முன் அதனை ஒரு வரைபடமாக வரைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு எங்கு கதவு, ஜன்னல் வைக்க வேண்டும், அதை எவ்வாறு அமைக்கலாம் என்று திட்டமிடலாம். சில வீடுகளில் சாப்பாட்டு மேசையை சமையல் அறையில் போட்டிருப்பார்கள். இடத்திற்கு ஏற்ப நம் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் மேலை நாடுகளில் சமையலறை விஸ்தாரமாகவே காணப்படும்.

சமையல் அறையில் மிகவும் முக்கியமானது ‘எலெக்ட்ரானிக்’ பொருட்களுக்கான இடத்தினை தேர்வு செய்வது. மூன்று உபகரணங்கள் என்றால் ஐந்து ‘பாயின்ட்டுகள்’ அமைக்கலாம். எதிர்காலத்தில் புதிய உபகரணங்கள் வாங்கினாலும் பயன்படுத்த எளிதாக இருக்கும். காரணம், ‘எலெக்ட்ரிக்’ குக்கரில் பதார்த்தங்கள் சமைத்துக் கொண்டிருப்போம், அந்த நேரத்தில் பால் சூடாக்க வேண்டும் என்றால், குக்கரை நிறுத்திவிட்டு மைக்ரோவேவ்வினை பயன்படுத்த வேண்டும்.

இத்தகைய சிரமங்களை தவிர்க்க போதிய அளவு ‘பாயின்ட்டு’களை பொருத்திக் கொள்ளலாம். விஞ்ஞான முன்னேற்றம் காபி இயந்திரத்தில் துவங்கி சப்பாத்தி மெஷின் வரை வந்துவிட்டது. அடுப்பு பயன்படுத்தும் அளவுக்கு மின் உபகரணங்களும் அத்தியாவசியமாகிவிட்டது.சமையலறையை பொறுத்தவரை அடுப்பு வைக்குமிடம், கையலம்பும் இடம், ‘ஃபிரிட்ஜ்’ இவற்றை முதலில் நிர்ணயிக்க வேண்டும். அதன் பிறகு மேடையின் மேல்பாகம், கீழ்பாகம், பக்கவாட்டில் இடத்தினைப் பொருத்து அலமாரிகள் அமைக்கலாம். அடுப்பின் மேல் பாகத்தில் சிம்னியினை மட்டுமே பொருத்த வேண்டும். அங்கு அலமாரி வைக்கக்கூடாது. காரணம், அடுப்பு சூட்டினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு அலமாரி திறக்கும் பொழுது, மற்றொன்று தலையில் இடிக்கும்படியான அமைப்புகளை தவிர்க்கலாம். ஒவ்வொரு அமைப்பும் நம் மனதில் வரைபடமாக வரைந்து பார்த்து பிறகு அமைப்பது நலம். பரன் கண்டிப்பாக சமையலறைக்கு தேவை. காரணம், அதிகப்படியான பொருட்கள் அல்லது என்றோ எப்பொழுதோ பயன்படுத்தும் பொருட்களை மேலே பரணில் அடுக்கி விடலாம். தினசரி பயன்பாட்டிற்குத் தேவையான பொருட்களை மட்டுமே கைக்கு எளிதாக எடுத்து வைக்குமிடத்தில் வைத்துக் கொள்ளலாம். பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் செட்டிலான பிறகு தேவையில்லாத பாத்திரங்களை அப்புறப்படுத்தி விடலாம்.

சமையலறை, ஆரோக்கியம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும். நிறைய பொருட்களை பராமரிப்பது சிரமம். பயன்படுத்தாமல் மேலே போட்டாலும் நாளடைவில் கெட்டுப்போகும். அளவோடு வைத்துக் கொண்டு, அழகாக பராமரித்தாலே போதும். சமையலறை மேடையின் உயரமும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். குடும்பத் தலைவியின் உயரத்திற்கேற்றபடி அமைத்துக் கொள்ளலாம். உயரமான அலமாரிகளில் பொருட்களை எம்பி எடுப்பது குட்டையாக இருப்பவர்களுக்கு சிரமம்.

அது போல் கீழ் பக்கமாக அமைக்கும் அலமாரிகளிலிருந்து பொருட்களை குனிந்து எடுப்பது என்பது உயரமானவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சிரமம் ஏற்படுத்தும். இவற்றை யோசித்து அதற்கு ஏற்ப வடிவமைக்கலாம். சமையலறை சிறியதாக இருந்தால் டைனிங் டேபிள் மற்றும் ஃபிரிட்ஜினை வரவேற்பு அறையில் வைக்கலாம். முதலில் பொருட்களை அடுக்கும்போதே, சில கருத்துக்களை யோசித்து குறித்துக் கொண்டோமானால், நடைமுறை செயல்களுக்கு சிரமப்பட வேண்டியதில்லை. அதாவது, நாம் தினமும் பயன்படுத்தும் ‘காபி’, ‘டீ’ போன்றவற்றிற்கான பாத்திரங்களை கைக்கெட்டும் அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எப்பொழுதோ பயன்படுத்தும் பொருட்களையும், பெரிய பெரிய பொருட்களையும் தொலைவில் உள்ள அலமாரிகளில் வைத்துக் கொள்ளலாம். அவசரத்திற்கு எடுத்துப் பயன்படுத்தும் வகையில் பொருட்களை அடுக்கி வைப்பதும் மிகமிக முக்கியம். சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் அடையாளமாக வரிசைப்படுத்தி அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து நல்ல ஒரு அமைப்பை தந்துவிட்டால், நாம் தான் சமையலறை ராணி. சமையல் அறை மேடை மற்றும் பாத்திரம் கழுவும் இடத்தில் கிரானைட் கல் பயன்படுத்தலாம். தற்போது சிங்க் பலவித டிசைன்களில் வருகிறது, அதை நம் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம். பெரிய அகலமான ‘சிங்க்’ அமைப்பதைவிட ‘ஆழமான சிங்க்’ வைத்தால் நிறைய பாத்திரங்களை துலக்குவதற்காக சேர்த்து வைக்கலாம்.

வழுவழுப்பான தரையை சமையலறையில் ஓரளவு தவிர்க்கப் பார்க்கலாம். தண்ணீர் புழங்கும் இடமாக இருப்பதாலும், எண்ணெய் பிசுக்கு ஒட்டியிருந்தால், வழுக்கி விழும் வாய்ப்புள்ளது. சமையலறை நல்ல காற்றோட்டம் கொண்டதாக இருப்பது நல்லது. வெளிர் நிறங்கள்தான் சமையலறைக்கு ஏற்றது. நல்ல வெளிச்சமும் தேவை என்பதால், இருபுறமும் விளக்குகள் போடலாம். பொருட்களை வைக்க தனி ஸ்டோர் ரூம் அமைத்து பராமரித்து வரலாம். அடுக்கு மாடிக் கட்டடங்கள் தான் இன்று பலரும் விரும்புகிறார்கள்.

சிறிய சமையலறையில் அனைத்து வசதிகளுடன் அழகான தோற்றத்தில் மாடுலர் கிச்சன் அமைத்துக் கொள்வதுதான் இன்றைய ஸ்டைல். இடத்தின் அமைப்புக் கேற்றவாறு, எந்தப் பொருளும் அதனதன் இடத்தில் இருக்கும் படி, அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கியவாறு அமைக்கப்படுகிறது. சாப்பாட்டு தட்டுகள் வைக்க ஒரு ‘ஸ்டாண்டு’, சிறிய டப்பாக்கள் வைக்க ஒரு இடம், மளிகைப் பொருட்கள் வைக்கும் அலமாரி, கரண்டி, ஸ்பூன் போன்ற அயிட்டங்கள் வைக்க ஒரு அமைப்பு என பல அலமாரிகளோடு, சமைக்கும் பாத்திரங்கள் பல்வேறு உலோகங்களில் என அனைத்தினையும் இதில் அமைக்க முடியும். அழகான தோற்றத்தை சமையலறைக்கு தந்து வேலைகளை சுலபமாக்கி தரும். இன்றைய காலத்தில் வீடு வாங்குபவர்கள் அனைவருமே இதைத்தான் விரும்புகிறார்கள்.

வண்ணமயமான டிசைன்கள், அழகிய டிராக்கள், கூடைகள் போன்ற அமைப்புகள் இதில் அடங்கும். நம் சமையலறை இடத்தைக் காட்டி, என்னென்ன வசதிகள் வேண்டும் எனக் கூறி விட்டால் போதும். அழகிய டிசைன் அமைத்து, நமக்கு வெளியில் எந்தப் பொருளும் தெரியாதவாறு நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்ப அமைக்க முடியும். பார்க்க ரிச்சாக இருக்கும். இதற்காக கைதேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். மிகச் சிறிய இடத்தைக் கூட அழகாக காட்டிவிடுவார்கள்.

மின் உபகரணங்களான மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைக்கூட சரியான இடத்தில் வைத்து மூடிய கதவு (Shutters) பொருத்தி விடலாம். எப்பொருளுமே வெளிக்குத் தெரியாது. குறைந்த இடத்தில், குறைவான செலவில், அதிகப்படியான வசதிகளோடு அழகைத் தந்து நம்மை சமைக்கத் தூண்டுவதுதான் இந்த மாதிரி ‘மாடுலர் கிச்சன்’. சமையலறைதானே என்றில்லாமல், வரவேற்பறையை எப்படி அலங்கரிக்கிறோமோ, அதுபோல் சமையலறையில் அழகான பாத்திரங்களையும், விதவிதமான டப்பாக்களையும் பளபளவென காட்சியாக்குவோம். நம் கற்பனைக்கேற்ற அலங்காரங்களை செய்வோம்.

Tags : Nandavana ,
× RELATED மணல் கடத்தலை எதிர்த்து குரல் கொடுத்த முதல் பெண்!