நன்றி குங்குமம் தோழி
கல்வி அனைவருக்கும் அவசியமானது. ஆனால், அதை எழுத்தாக மட்டுமே படிக்காமல் செயல்முறை மூலமாக பயின்றால் இன்றைய குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தங்களின் பின்னணியினை அமைத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும். அப்படிப்பட்ட செயல்முறை கல்வியினை வழங்கி வருகிறார் சென்னையை சேர்ந்த அனில் னிவாசன். இவர் ‘க்ரூ’ (kruu) என்ற நிறுவனத்தினை நிறுவியது மட்டுமில்லாமல் பள்ளிக் குழந்தைகளுக்கு அதன் மூலம் உலகளாவிய கல்வியினையும் வழங்கி வருகிறார்.
‘‘நான் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறேன். மேலும், நான் பியானோ கலைஞராகவும் செயல்பட்டு வருகிறேன். இசை துறையில் நான் பயணித்து வருவதால் ‘ராப்சோடி’ என்ற ெபயரில் இசை மற்றும் கலையினை பயன்படுத்தி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை புதுமையான முறையில் கற்பிக்கும் முறையினை அறிமுகம் செய்தேன். அதில் பல மாணவர்கள் இணைந்து பலன் பெற்று வருகிறார்கள். அதன் அடுத்த உருவாக்கம்தான் ‘க்ரூ’ (kruu). இதுவும் ஒரு வகையான கற்றல் முறைதான். பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களையும் அவர்கள் செயல்முறையில் பயிலும் முறை’’ என்றவர், 2023ல் க்ரூவினை ஆரம்பித்துள்ளார்.
‘‘க்ரூ ஆரம்பிக்க கொரோனா காலக்கட்டத்தில் எனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுதான் காரணம். சிகிச்சைக்காக நான் மருத்துவரிடம் சென்ற போது அவர் என்னை பரிசோதித்துவிட்டு நான் அதிக காலம் வாழமாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் நான் முதலில் மனமுடைந்தாலும், மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன். அவர் பார்த்துவிட்டு என் பிரச்னைக்கான மருந்தினை பரிந்துரைத்தார். பேராசிரியரான எனக்கு அந்த சமயத்தில் தோன்றியது ஒன்றுதான்.
மருத்துவம் படித்துவிட்டு இவ்வாறு தவறாக கணிப்பதால், நோயாளிகள் எவ்வளவு பெரிய இன்னல்களை சந்திப்பார்கள். ஐந்தாண்டு காலம் என்ன பயின்றார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. என்னுடைய சிந்தனையும் அதை சுற்றியே இருந்தது. அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நம்முடைய கல்வி முறையில் தேர்வு மதிப்பெண்ணிற்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறோம். பாடங்களை அப்படியே படித்து மதிப்பெண் எடுத்துவிடலாம். ஆனால், அதை செயல்முறையில் செய்யும் போது பாடங்களை நன்கு புரிந்து கொள்ள உதவும். அதாவது, வேதியியல் பாடத்தினை படித்து நல்ல மதிப்பெண் எடுக்கலாம். அதே குழந்தைக்கு நம்முடைய சமையல் அறையில் செயல்படும் வேதியியல் குறித்து தெரியுமா என்பதுதான் என் கேள்வி.
மேலும், இன்று பல பெற்றோர் தங்களின் மகனோ, மகளோ பொறியாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்கிறார்கள். ஆனால், குழந்தைக்கு அந்த துறை விருப்பமா என்று கேட்டறிந்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்ெவாரு பெற்றோரும் புரிந்து கொண்டு துணையாக நிற்கும் போது, மாணவர்கள் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். இன்று வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. அதை மாணவர்கள் தேர்வு செய்து அதில் தங்களின் கவனத்தை செலுத்தும் போது கண்டிப்பாக எதிர்காலத்தில் வல்லரசு தலைமுறைகளை உருவாக்க முடியும். அந்த நோக்கத்தில்தான் நான் இந்த கல்வித் திட்டத்தினை ஆரம்பித்தேன்’’ என்றவர் அதன் செயல்பாடு குறித்து விவரித்தார்.
‘‘இது முழுக்க முழுக்க செயல்முறை குறித்த கல்வி. குழந்தைகள் தங்களின் பாடங்களை சார்ந்தும் அல்லது பொது நலம் சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் இதன் மூலம் கொண்டு வரலாம். சென்னையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மழையினால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்பதை நம் மாணவர்கள் கண்டறியும் ேபாது அவர்களுக்கு வாட்டர் மேனேஜ்மென்ட் குறித்த படிப்பில் ஆர்வம் இருப்பதை கண்டறியலாம். அதற்கேற்ப அவர்கள் தங்களின் படிப்பினை தேர்வு செய்ய உதவுவதுதான் எங்களின் நோக்கமே.
காரணம், பலர் படித்த படிப்பிற்காக பிடிக்காத வேலையினை செய்து வருகிறார்கள். அப்படி இல்லாமல் அவர்களின் திறமை எதில் இருக்கிறது என்று முன்பே கண்டறிந்துவிட்டால் அவர்கள் அந்த துறையில் பிரகாசிக்க முடியும். மேலும், +2 முடித்துவிட்டு கல்லூரியில் சேரும் போது அங்கு செயல்முறையில் ஈடுபடும் போது மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். இன்று பல நிறுவனங்கள் அவர்களின் படித்த படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அதில் அவர்களின் செயல்திறனை கணக்கிட்டு தான் வேலையினை நிர்ணயிக்கிறார்கள். இந்த இடைவேளையை குறைப்பதுதான் க்ரூவின் முக்கிய வேலை.
செயல்திறன் கல்வி அவசியம் என்று சொல்லக் காரணம் மாணவர்களை சிந்திக்க தூண்டும். தற்போது இந்த திட்டத்தில் 4 லட்சத்து, 74 ஆயிரம் மாணவர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும், உலகம் முழுதும் 127 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மென்டராக இருக்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களுக்கு உலகளாவிய கல்வியினை கொடுக்க முடிகிறது. நான் சொல்லும் செயல்திறன் என்பது ஒரு இயந்திரத்தை கண்டுபிடிப்பது இல்லை. நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைக்கான தீர்வுகள் கண்டுபிடிப்பது.
இதில் இரண்டு விஷயத்தை மாணவர்களிடம் இருந்து புரிந்துகொள்ளலாம். அதாவது, ஒரு செயல்திறன் குறித்து மாணவனிடம் தீர்வு காண சொல்லும் போது விருப்பம் உள்ளவர்கள் அதற்கான தீர்வினை ஆய்வு செய்வார்கள். விருப்பம் இல்லாதவர்கள் அதில் ஈடுபட மாட்டார்கள். இதன் மூலம் அந்த மாணவனுக்கு எந்த துறையில் விருப்பம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்திறன்களை வடிவமைக்க சொல்லலாம்’’ என்றவரின் க்ரூவில் 600க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைந்துள்ளன.
‘‘தனிப்பட்ட மாணவனிடம் எங்களின் திட்டத்தினை கொண்டு செல்வதற்கு பதிலாக பள்ளி மூலம் அணுகும் போது அது எங்களுக்கு சுலபமாக இருந்தது. மேலும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பள்ளி ஆசிரியர்களுக்கும் இது குறித்த புரிதல் ஏற்படுத்துவதால், அவர்களே தங்களின் மாணவர்களின் மென்டார்களாக செயல்பட ஆரம்பிப்பார்கள். பள்ளி நிர்வாகத்திற்கும் தங்களின் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
இது முழுக்க முழுக்க ஆன்லைன் முறை பயிற்சி என்பதால், மாணவர்கள் தங்களின் சந்தேகத்தினை ஆன்லைன் மூலமாக மென்டார்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் வசதியாக இருக்கிறது. அதே சமயம் அவர்கள் செய்யும் பிராஜக்ட்டுகள் ஆப்லைனில் தான் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு போல்டெபிள் மேஜை என்றால் அதை அவர்கள் வடிவமைத்து எவ்வாறு இயங்குகிறது என்பதை காண்பிக்க வேண்டும்’’ என்றவர், மாணவர்களுக்கான சம்மிட் (Summit) ஒன்றை அமைத்து அதில் சிறப்பு மாணவர்களை தேர்வு செய்து கவுரவித்துள்ளார்.
‘‘எங்களின் க்ரூ 12 நாடுகளில் இயங்கி வருகிறது. இது துவங்கி மூன்று வருடமானதால், முதல் முறையாக சம்மிட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் 300 மாணவர்கள் பங்கு பெற்று தங்களின் கண்டுபிடிப்புகளை அங்கு டிஸ்பிளே செய்தார்கள். அதில் சிறந்த மூன்று மாணவர்களை தேர்வு செய்து பரிசளித்தோம். தற்போது பள்ளி மாணவர்களுடன் மட்டுமே எங்களின் பணி இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம். ஒரு வருடத்திற்கு மூன்று பிராஜக்ட்டுகளை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதில் AI முதல் உயிரியல் வரை அனைத்து பாடத்திற்கான செயல்திறன்கள் உள்ளன. அதை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதை நாங்க பல பிரிவாக பிரித்திருக்கிறோம். அறிவியல், கணிதம் ஒரு துறை, AI இரண்டாவது பிரிவு, சமூக அறிவியல், பொருளியல் ஒரு பிரிவு, பிசினஸ் மேனேஜ்மென்ட், தொழில் முனைவோர் மற்றும் கலை, விஷுவல் ஜர்னலிசம் என பல பிரிவுகள் உள்ளன’’ என்ற அனில் ஸ்ரீ ஸ்ரீ னிவாசன் மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை வரும் ஆண்டுகளில் இணைக்க இருப்பதாக தெரிவித்தார்.
தொகுப்பு: ரிதி
