கடந்த 1953 ஜனவரி 7ம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாங்கோயில் என்ற ஊரில் கிருஷ்ணசாமி, அமராவதி தம்பதிக்கு 3வது மகனாக பிறந்தவர் கே.பாக்யராஜ். அவருக்கு செல்வராஜ், தன்ராஜ் ஆகிய 2 அண்ணன்கள் இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் கதை, திரைக்கதை, வசனகர்த்தா மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர், பாடகர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பேச்சாளர்,
எழுத்தாளர், கட்சித் தலைவர் என்று பன்முகம் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த கலைஞராக திகழ்ந்தவர், கே.பாக்யராஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ ஆகிய படங்களில் பணியாற்றி, திரைக்கலை குறித்து நன்கு பயின்ற அவர், இப்படங்களில் சிறிய கேரக்டரிலும் நடித்திருந்தார். ‘புதிய வார்ப்புகள்’ என்ற படத்தின் மூலம் பாக்யராஜை ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா, அவரை வசனம் எழுதவும் வைத்தார்.
கடந்த 1979ல் பாக்யராஜ் இயக்கி நடித்த முதல் படம், ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’. இடைப்பட்ட காலத்தில் அவர், ராஜேஷ் ஹீரோவாக அறிமுகமான ‘கன்னிப்பருவத்திலே’ என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து ‘ஒரு கை ஓசை’ என்ற படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த அவர், வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார்.
அவருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர், ரசிகைகள் இருக்கின்றனர். தாய்க்குலத்துக்கு மிகவும் பிடித்த இயக்குனராகவும், நடிகராகவும், கதாசிரியராகவும் அவர் விளங்கினார். ‘மௌன கீதங்கள்’, ‘இன்று போய் நாளை வா’ ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தை பாக்யராஜ் இயக்கி நடித்தார். இது அவரது பாணியில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது.
‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘முந்தானை முடிச்சு’ போன்ற படங்கள் கே.பாக்யராஜின் திரைக்கதை பாணியை உச்சத்துக்கு கொண்டு சென்றன. குறிப்பாக, ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தில் கே.பாக்யராஜ் கையாண்ட முருங்கைக்காய் போன்ற விஷயங்கள், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது. ‘சின்ன வீடு’, ‘எங்க சின்ன ராசா’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்களின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.
எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது, தமிழ்நாட்டில் கடந்த 1989 பிப்ரவரி 11ம் தேதி கே.பாக்யராஜ் தொடங்கிய அரசியல் கட்சியாகும். இக்கட்சி கடந்த 1991ல் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளை பெற்றார். இக்கட்சி ஆரம்பத்திலேயே தோல்வி அடைந்தது. பிறகு பாக்யராஜ் அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவிலிருந்து விலகி, கடந்த 2006 ஏப்ரல் 5ம் தேதி கலைஞர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார், பிறகு திமுகவிலிருந்தும் விலகினார்.
கடந்த 1988ல் தொடங்கப்பட்ட ‘பாக்யா’ என்ற வார இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி வந்த பாக்யராஜ், அந்த இதழில் வெளியான தனது சுவாரஸ்யமான கேள்வி-பதில் பகுதி மூலம் ரசிகர்களையும், வாசகர்களையும் தன்வசப்படுத்தினார். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ என்ற படத்துக்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பிறகு இப்படத்தை இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடங்களில் நடிக்க, ‘ஆக்ரி ராஸ்தா’ என்ற பெயரில் பாக்யராஜ் இயக்கினார்.
இது மாபெரும் வெற்றிபெற்றது. இளையராஜா இசையில் அதிக படங்களை இயக்கி நடித்த பாக்யராஜ், பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தான் இயக்கி நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற படத்துக்கு தானே துணிச்சலாக இசை அமைத்தார். தொடர்ந்து தனது படங்களுக்கு தானே இசையமைத்து வந்தார். அவர் இயக்கி நடித்த பல படங்கள் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. பாலிவுட்டில் அவரது ரீமேக் படங்களில் ஸ்டார் நடிகர்களான ராஜேஷ் கன்னா, அனில் கபூர், கோவிந்தா போன்றோர் நடித்திருந்தனர்.
இந்தியில் ‘ஓ சாத் தின்’ என்ற பெயரில் வெளியான ‘அந்த 7 நாட்கள்’, தவிர ‘பேட்டா’ என்ற பெயரில் வெளியான ‘எங்க சின்ன ராசா’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. ‘தமிழ் திரையுலகில் எனது கலை வாரிசு என்று பாக்யராஜை அறிவிக்கிறேன்’ என்று, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சொன்னார். ‘தாவணிக் கனவுகள்’ என்ற படத்தில் சிவாஜி கணேசனை இயக்கி, அவருடன் இணைந்து நடித்தார்.
1950, 60களைப் போல் 70களிலும் வசனங்களை வைத்தே கதை சொல்லும் பாணியை பல இயக்குனர்கள் பின்பற்றி வந்தார்கள். அந்த பாணியை முற்றிலுமாக உடைத்து காட்சிகளால் கதை சொன்னவர் பாக்யராஜ். 100 பக்க வசனம் பேசி உணர்த்தும் விஷயத்தை, ஒரு நிமிட காட்சி உணர்த்த வேண்டும் என பாக்யராஜ் சொல்வார். அதுதான் அவரது பாணியாகவும் இருந்தது. அவரது வெற்றிக்கான காரணங்களில் இது முதன்மையானது.
* கீச் கீச் குரல்
ஆரம்பகாலத்தில் பாக்யராஜின் குரல் ‘கீச்… கீச்’ என்றிருக்கும். இதனால், ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோ வாய்ப்பை இழந்த கங்கை அமரன், பாக்யராஜூக்கு டப்பிங் பேசினார். ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் நடித்த பாக்யராஜுக்கு நேதாஜி என்பவர் டப்பிங் பேசினார். அதற்கு பிறகு நடித்த படங்களில் இருந்துதான் பாக்யராஜின் ஒரிஜினல் குரல் தொடர்ந்தது.
* கங்கை அமரனால் ஹீரோவானார்
‘புதிய வார்ப்புகள்’ படத்துக்கு ஹீரோ தேடிய பாரதிராஜா, கதை டிஸ்கஷன்போது அங்கும் இங்குமாக திரிந்த கங்கை அமரனை பிடித்து நீ தாண்டா என ஹீரோ என சொல்லிவிட்டார். பிறகு போட்டோஷூட் நடத்தி பார்த்தவர், திருப்தி அடையவில்லை. அருகில் நின்றிருந்த தனது உதவி இயக்குனர் பாக்யராஜை பார்த்து தலை முடி வெட்டிட்டு வா என சொல்லி அனுப்பினார். அவரை போட்டோ ஷூட் நடத்தி ஹீரோவாக்கிவிட்டார்.
* தொலைந்த மோதிரம்
முதல் மனைவி பிரவீணா, பாக்யராஜை ராஜா என்றுதான் செல்லமாக அழைப்பார். அவர் பரிசளித்த ‘R’ என்ற எழுத்து கொண்ட மோதிரம் பாக்யராஜ் விரலில் எப்போதும் இருந்தது. ஆனால், அந்த மோதிரம் தொலைந்த நிலையில், பிரவீணா மறைவுக்கு பிறகு அதே டிசைனில் மோதிரத்தை பரிசளித்தார் இரண்டாவது மனைவி பூர்ணிமா.
* பாடகி ஜானகி கொடுத்த பேனா
இசை அமைப்பாளராக 6 படங்களில் பாக்யராஜ் பணியாற்றியுள்ளார். ‘ஆராரோ ஆரிரரோ’ என்ற படத்தில் அவரது இசையில் உருவான ‘என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்’ என்ற பாடல், பாடகி எஸ்.ஜானகியின் மனம் கவர்ந்த பாடலாகும். அதற்காக ஜானகி பாராட்டி பரிசளித்த பேனாவை பாக்யராஜ் பாதுகாத்து வைத்திருந்தார்.
* எம்ஜிஆர் படத்தை எடுத்த பாக்யராஜ்
அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ‘அவசர போலீஸ் 100’ என்ற படம், கடந்த 1977ல் தமிழக முதல்வராவதற்கு முன்பு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் சில காட்சிகளில் நடித்து நிறுத்தப்பட்ட ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படத்தின் மறுவடிவமாக உருவானது. அப்படத்தில் எம்ஜிஆர் நடித்த காட்சிகளை வைத்து புதிய திரைக்கதை எழுதி, அதில் இரட்டை வேடங்களில் நடித்து கே.பாக்யராஜ் உருவாக்கிய ‘அவசர போலீஸ் 100’, ரசிகர்களை கவர்ந்தது.
* நிறைவேறாத ஆசை
சமீபத்தில் பாக்யராஜின் 50வது பொன்விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மீண்டும் படம் இயக்க ஆயத்தமாகி வருவதாக பாக்யராஜ் சொன்னார். ஆனால் அவரது அந்த கடைசி ஆசை நிறைவேறவில்லை.
