விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ என்ற படம், வரும் ஜூலை 3ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சோஷியல் மீடியா பதிவுகளில், ரசிகர்கள் வெளியிட்ட கமென்டுகளை பார்த்தேன். அது எனக்கு நெகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது. சமீபகாலமாக எனது முகம் சோர்வாக இருப்பதை கவனித்து இருப்பீர்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாக தன்னைத்தானே தாக்கும் ஆட்டோஇம்யூன் (Autoimmune) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
அதற்காக டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிட்டு வருகிறேன். மருந்துகளின் பக்கவிளைவு அதிகமான சோர்வை கொடுத்துள்ளது. ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் நான் நம்பிக்கையுடன் மேற்கொண்டு வரும் பணியும், ‘கட்டா குஸ்தி 2’ படத்துக்காக இரவு, பகலென்று பார்க்காமல் கடுமையாக உழைத்தவர்களின் பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேற செய்கின்றன. எனது உடல்நிலை விரைவில் குணமடையும். ஒவ்வொரு கமென்டுக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
