போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த நடிகையும், அழகி போட்டி வெற்றியாளருமான திவிஷா ஷர்மா (31), கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், வரதட்சணை கேட்டு மாமனார் வீட்டை சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தியதாக திவிஷா ஷர்மாவின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். உயிரிழப்பதற்கு முன்பு, ‘அம்மா, என்னை இங்கிருந்து அழைத்து செல்லுங்கள். என் வாழ்க்கை நரகமாகிவிட்டது’ என்று திவிஷா ஷர்மா தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது அம்பலமானது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் திவிஷா ஷர்மாவின் கணவர் சமர்த் சிங்கை தேடி வருகின்றனர். ஆனால், திவிஷா ஷர்மா மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக, கணவர் தரப்பினர் அந்த புகாரை மறுத்துள்ளனர். இதுகுறித்து நடிகையும், பாஜ எம்.பியுமான கங்கனா ரனவத் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய சமூகம் திருமணத்துக்கு பிறகு பெண்களை கைகழுவி விடுவதில் மிகவும் மோசமானதாக இருக்கிறது.
தினமும் இளம் பெண்கள் இதுபோன்ற கொடுமைகளால் உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகள் வருவது வேதனை அளிக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் சினிமா காட்டும் மாய பிம்பங்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம். எதற்கும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் கவுரவம்தான் முக்கியமே தவிர, திருமணம் அல்ல’ என்று அட்வைஸ் செய்துள்ளார்.
