மும்பை: பாலிவுட் நடிகை சாரா அலிகான், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கிண்டல், கேலிகளுக்கு ஆளாகி வருகிறார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர், ‘சமூக வலைத்தள விமர்சனங்கள் எனது மனநிலையை பாதிக்காது என்று சொன்னால் அது பொய். சில நேரங்களில் அது என்னுடைய மனதை கடுமையாக பாதிக்கிறது. ஆனால், எனது ஒவ்வொரு வேலையையும் எனது ரசிகர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களை ஏமாற்றும்போது நான் மனதளவில் அதிக வருத்தம் அடைவேன்.
திரையுலக பயணத்தின் ஆரம்பத்தில் எனது முழு கவனமும் மக்கள் மீதே இருந்தது. ஆனால், ஒருகட்டத்துக்கு பிறகு எனக்காகவும் உழைக்க கற்றுக்கொண்டேன். எனது பணியை மனதார ரசிக்க தொடங்கும்போது, அதில் இருக்கும் உண்மையான மகிழ்ச்சி வெளியே தெரியவரும். எனது பணியில் நான் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன் என்று எனக்குள்ளேயே சொல்லும்போது, தேவையற்ற குற்ற உணர்வுகள் ஏற்படுவது இல்லை. என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். இனிமேல் எல்லாம் கடவுளின் செயல் என்று நினைக்கும்போது மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
