மே 4ம் தேதிக்கு பிறகு விஜய்க்கு நிரந்தர ஓய்வு: போஸ் வெங்கட் ‘பளார்’

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி வருமாறு: இந்த தேர்தல் களம் திமுகவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கிறது. ஒருகாலத்தில் நமது அரசியல், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி, அதன் தலைவர்கள், அதன் பிரமுகர்கள் ஆகியோருக்கு இடையே இருந்தது. இன்று ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகளை விட, நேரடியாக களத்தில் சென்று பார்த்தால், மக்களுக்கு நல்லது செய்தவர்கள், மக்களுடன் இணக்கமாக இருந்தவர்களை மட்டுமே அவர்கள் ஆதரிக் கின்றனர்.

இதுவரை 30 தொகுதிகளுக்கு மேல் பிரசாரத்துக்கு சென்றுள்ளேன். ஒரு கிராமத்தில் 1,000 ஓட்டுகள் இருந்தால், அதில் 900 ஓட்டுகள் வரை திமுகவுக்கு இருக்கிறது. குறிப்பாக அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்ததன் காரணமாக விரக்தி அடைந்த அதிமுக தொண்டர்கள் பலர், திமுகவுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். தவெக என்ற ஒரு கட்சி கிராமப்புறங்களில் அறவே இல்லை என்பது பிரசாரத்துக்கு செல்லும்போது தெரியவந்தது. ஒரு ஊரில் முதல் 1,500 ஓட்டுகள் இருந்தால், அதில் 3 அல்லது 4 ஓட்டு மட்டுமே தவெகவுக்கு இருக்கிறது.

அதிமுக ஜெயித்துவிடும், தவெக வந்துவிடும் என்று பரவும் தகவல் அனைத்தும் பொய். தேர்தல் களத்தில் அது வேறுமாதிரி இருக்கிறது. நடக்க இருக்கும் தேர்தல், 4 முனை போட்டி என்று சொல்கின்றனர். சீமானின் வாக்கு வங்கி எந்தவிதத்திலும் மற்ற கட்சிகளை பாதிக்காது. தவெகவுக்கு இளைஞர்களும் மற்றும் முதல்முறையாக வாக்களிப்பவர்களுமாக, 234 தொகுதிகளில் 180 தொகுதிகளில் 6 முதல் 7 சதவீத வாக்குகள் பதிவாக வாய்ப்பு இருக்கிறது. அதெல்லாம் திமுக மற்றும் அதிமுகவின் வாக்குகள் கிடையாது.

செங்கோட்டை யன் போன்ற நட்சத்திர வேட்பாளர்களுக்கு 30,000 வாக்குகள் வரை இருக்கும். அதுபோல், விஜய் நிற்கும் தொகுதி யில் 2 லட்சம் வாக்குகள் இருந்தால், அதில் 30 முதல் 35 ஆயிரம் வாக்குகள் வரை அவருக்கு பதிவாக வாய்ப்புள்ளதே தவிர, போட்டி என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான். தேர்தல் அறிக்கை என்பது அடிப்படை தேவைகள் அடங்கியது மட்டுமே. ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தேர்தலுக்கான அறிக்கையில் கூட சொல்லப்படாத பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் ஆகியவை கடந்த தேர்தல் அறிக்கையில் இல்லை. ஆனால், அதை நடைமுறைப்படுத்தி சாதனை படைத்துள்ளது திமுக. தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்படு கிறது. ஆனால், திமுக தொகுதிவாரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் 20 முதல் 30 வாக்குறுதிகளை அறிவித்து இருக்கிறது. கல்லூரிகள், பாலங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை திமுக அரசு தொகுதி வாரியாக கட்டிக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டதோ, அதை வைத்து தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

* மக்கள் தலைவர் ஸ்டாலின்
73 வயதுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலையில் மக்களுடன் நடைப்பயிற்சி செய்வது, தேநீர் அருந்துவது என்று தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அவர்தான் மக்களுக்கான தலைவர். சமீபத்தில் சீமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது சொந்த தொகுதியை விட மற்ற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்து வருகிறார். வெயில், மழை என்று பார்க்காமல் அனைவரும் மக்களுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் ‘மக்கள் தலைவர்கள்’ என்று சொல்லலாம். இந்த நிலையில், படப்பிடிப்பில் 2 மணி நேரம் மட்டுமே நடித்துவிட்டு, மீதி 8 மணி நேரம் கேரவனில் இருக்கும் நடிகர் விஜய்யால் இந்த வெயிலை தாங்கிக்கொள்ள முடியாது. பல இடங்களுக்கு சென்று, மக்களோடு மக்களாக இருந்தால்தான் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அவருக்கு நல்ல ஓய்வு தேவை. வரும் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய்க்கு நிரந்தர ஓய்வு கிடைக்கும்.

Related Stories: