ஜி.வி.பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கியபடி பல படங்களில் நடித்து வரும் செல்வராகவன் கூறுகையில், ‘நான் முன்கூட்டியே திட்டமிட்டு நடிக்க வந்தவன் கிடையாது. ஒரு விபத்து போல் திடீரென்று நடிகனாகிவிட்டேன். எனது குடும்பத்தில் இருந்து, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று யாருமே திட்டமிட்டு வரவில்லை. அந்த வாய்ப்பு தானாக அமைந்ததுதான். செஃப் ஆக வேண்டும் என்று தனுஷ் நினைத்தார். அவரை நான்தான் கட்டாயப்படுத்தி ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தேன்.
நான் அமெரிக்காவுக்கு சென்று, உயர்ந்த படிப்பை மேற்கொள்ள நினைத்தேன். ஆனால், என் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நடிக்க வந்துவிட்டேன். நான் நடித்தே ஆக வேண்டுமா என்று தனுஷிடம் கேட்டேன். ‘எப்படி ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ரொம்ப சாதாரணமாக, ‘நமக்கு வேற என்ன தெரியும்?’ என்று, ஒரே வார்த்தையில் பதில் சொல்லி முடித்துவிட்டார். அது மிகவும் நியாயமான பதிலாக இருந்தது. அதனால், உடனே என்னை அப்படி மாற்றிக்கொண்டேன்.
அது மிக இயல்பாகவே நடந்தது. நடிக்க செல்லும்போது, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். படம் இயக்கும்போது, வேறு எதிலும் கவனத்தை திருப்ப மாட்டேன். டைரக்ஷன் செய்வது அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. அது எனக்கு சிறுவயதில் இருந்தே கனவுடன் வந்த ஒரு விஷயம். அதை விட்டுவிட முடியாது. நடிப்பை பொறுத்தவரையில் நிறைய படங்களில் நடிப்பேன்’ என்றார்.
