விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: தஞ்சையில் நாளை நடக்கிறது

தஞ்சை: விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்றிரவு தஞ்சை வருகிறார்.  தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களை புறக்கணித்து, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கோட்டைவிட்ட தவெக அரசை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் திமுக சார்பில் நாளை(3ம் தேதி) காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு வரவேற்கிறார். இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் ஜவாஹிருல்லா, மஜக மாநில தலைவர் தமீமுன் அன்சாரி, எஸ்டிபிஐ மாநில செயலாளர் நெல்லை முபாரக், திக பொது செயலாளர் ஜெயக்குமார், தேமுதிக மாவட்ட செயலாளர் சிவநேசன், மக்கள் நீதி மையம் மாவட்ட அமைப்பாளர் சரவணன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி ஆரோக்கியசாமி, கட்சி துணை பொது செயலாளர் திருச்சி சிவா, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கல்யாண சுந்தரம் எம்பி உள்ளிட்டோர் பேசுகின்றனர். திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்கிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் உதயநிதி இரவு 8 மணிக்கு தஞ்சை வருகிறார். அங்கு தஞ்சை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு அவர் சங்கம் ஹோட்டலில் தங்குகிறார்.

தொடர்ந்து நாளை(3ம் தேதி) காலை தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு மதியம் திருச்சி வந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Related Stories: