- வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்கு விழா
- மேட்டூர்
- திருச்சி
- ஆடி பெருக்கு திருவிழா
- ஆடி பெருக்கு
- திருச்சி அம்மா மண்டபம்
- மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம்
திருச்சி: ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுகிறது. வறண்ட காவிரியில் திருச்சி அம்மா மண்டபம், மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் உள்பட காவிரி கரையோரங்களில் பக்தர்கள் ஆடிபெருக்கை கொண்டாட ஷவர்கள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் முக்கிய ஆதாரமான நீர்நிலைகளை போற்றி வழிபடும் ஆடிப்பெருக்கு விழா நாளை (3ம் தேதி) கொண்டாடப்படுகிறது. காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
ஆடிப்பெருக்கன்று அதிகாலையில் எழுந்து காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று பொதுமக்கள் நீராடி விட்டு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வர். இதைதொடர்ந்து ஆற்றின் படித்துறைகளில் இலை போட்டு அரிசி, தானியங்கள், பழ வகைகள் உள்ளிட்ட விளைபபொருட்கள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து படையலிட்டு வழிபடுவர். புதுமண தம்பதியர் ஆற்றில் குளித்து புத்தாடை அணிந்து திருமணத்தன்று அணிவிக்கப்பட்ட மாலைகளை ஆற்றில் விடுவர். மேலும் சுமங்கலி பெண்கள் தங்களது மாங்கல்ய கயிறுகளை புதுப்பித்து கொள்வர். ஆண்களும் காவிரி தாயை வழிபட்டு கைகளில் மஞ்சள் கயிறு கட்டி கொள்வது வழக்கம்.
ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் மேட்டூரில் இருந்து பாசனம், ஆடிப்பெருக்குக்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் திருச்சி அகண்ட காவிரி உட்பட நீர்நிலைகள் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. இருப்பினும் திருச்சியில் ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் அம்மா மண்டபம் படித்துறை முன்புறம் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 20 என 40 ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. படித்துறையில் பெண்களுக்கு 10 இடங்களில் உடை மாற்றும் அறைகள் உள்ளன. 3 இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. கருமண்டப படித்துறை, வீரேஸ்வரம் படித்துறை, கீதாபுரம் படித்துறைகளில் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அம்மா மண்டபம் படித்துறை முதல் புதுத்தெரு சந்திப்பு வரை சாலையோர தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஓடத்துறை படித்துறை, காந்தி படித்துறை, எஸ்எஸ் கோயில் படித்துறை, அய்யாளம்மன் படித்துறைகளில் முன்னேற்பாடுகள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். மயிலாடுதுறை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் துலாக்கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவர். இந்தாண்டு காவிரியில் தண்ணீர் திறக்காததால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆடிப்பெருக்கு தினமான நாளை பக்தர்கள் நீராட வசதியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் துலாக்கட்ட காவிரி கரையில் கட்டப்பட்டுள்ள புஷ்கர தொட்டியில் போர்வெல் மூலம் தண்ணீர் இறைத்து நிரப்பி வருகின்றது.
