×

கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் புனிநீராடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்று வார விடுமுறை நாளை முன்னிட்டு காலை முதலே அதிகளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வர தொடங்கினர்.
இதையடுத்து அவர்கள் திரிவேணி சங்கமத்தில் நின்றவாறு கடலில் இருந்து உதித்து வந்த சூரியனை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் கடலில் புனிதநீராடிவிட்டு பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். தொடர்ந்து காலை 8 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் படகில் செல்ல டிக்கெட் பெற சென்றனர். இதற்கிடையே கன்னியாகுமரி கடலில் இன்று காலை முதல் திடீரென நீர்மட்டம் தாழ்ந்தது. ஆகவே வழக்கமான நேரத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதன் காரணமாக அலுவலக கேட் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். படகு சேவை நிறுத்தத்தால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஏற்காடு, ஒகேனக்கல் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக தென்மேற்கு பருவமழை சீசனின் ‘ஜில்’ கிளைமேட்டை ரசித்து செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், நடப்பாண்டு மழையில்லாமல் வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்தது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்காட்டில் பெய்த கனமழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. விடுமுறை நாளான இன்று காலையில் இருந்தே டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் லேடீஸ் சீட், ஜெண்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா மற்றும் ஏரிப்பூங்கா, சேர்வராயன் மலைக்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு களித்தனர்.

பின்னர், குடும்பத்துடன், படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். நீர்வரத்து 500 கனஅடியாக உள்ள நிலையில் அங்குள்ள மெயின் அருவி, சினி பால்சில் தண்ணீர் ஓரளவுக்கு தண்ணீர் வருகிறது. எண்ணெய் மசாஜ் செய்து கொட்டும் குறைந்த அளவு தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் காவிரியாற்றில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags : Kanyakumari ,Triveni Sangam ,
× RELATED குறிஞ்சிப்பாடி தேசிய நெடுஞ்சாலை...