- டாஸ்மாக்
- குரிஞ்சிபாடி தேசிய நெடுஞ்சாலை
- தேசிய நெடுஞ்சாலை
- குரிஞ்சிபாடி, கடலூர் மாவட்டம்
- கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை
- குறிஞ்சிப்பாடி மீனாட்சிப்பேட்டை…
வடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை (டாஸ்மாக்) அகற்ற வேண்டும் எனப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிஞ்சிப்பாடி மீனாட்சிபேட்டையில் கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் கடை எண் 2527 கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் தனியார் பள்ளி, திருமண மண்டபங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவை அமைந்துள்ளன.
இங்கு வரும் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி அந்த இடத்திலேயே அமர்ந்து குடித்துவிட்டு, காலி பாட்டில்களைக் கடையின் வாசலிலேயே போட்டுவிட்டுச் செல்கின்றனர். மேலும், இந்த வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களைச் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
கடையை ஒட்டி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, மது அருந்திவிட்டுச் சாலையில் விழுந்து கிடப்பவர்களால் அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளும் பொதுமக்களும் மிகுந்த அசௌகரியத்திற்கு ஆளாகின்றனர். மேலும், மதுப்பிரியர்கள் பெண்களைக் கேலி கிண்டல் செய்வதால் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. குறிப்பாக, மேம்பாலம் ஏறி இறங்கும் பகுதியில் இக்கடை அமைந்துள்ளதால், அண்மையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தினமும் இங்கு விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.
இது குறித்துப் பொதுமக்கள் கூறுகையில்:
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் வெளி விளிம்பிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்படும் கடைகள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் உள்ளன. ஆனால், நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கக் காத்திருக்கிறது எனத் தெரியவில்லை.
வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த கடைகளை மூடக்கோரி அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் இறங்கும் இடத்திலேயே ஆபத்தான முறையில் இயங்கும் இந்த மதுபானக் கடையை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் எனப் புரியவில்லை.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
