ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, அணைகள் திறப்பு; கேரளத்தில் மழைக்கு 9 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த பலத்த மழையில் 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை. இன்று 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் சில வாரங்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் முதல் இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்தது.

இந்த தொடர் மழையால் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் நேற்று ஒரே நாளில் 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் பலியானார்கள். 7 பேரை காணவில்லை. இந்த கனமழையால் இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரான்னி, கோட்டயம் மாவட்டம் பாலா, குருவாயூர் ஆகிய பகுதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. பத்தனம்திட்டா மாவட்டம் வடசேரிக்கரையில் தான் மிக அதிகமாக 24 மணிநேரத்தில் 36.1 செமீ மழை பெய்தது. வாகமண்ணில் 31.43 செமீ மழை பெய்தது.

கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையைத் தொடர்ந்து கேரளத்தில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் கல்லார், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யார், அருவிக்கரை, பேப்பாறை உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ள பாதிப்பு குறித்து கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறியதாவது: கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக வருவாய் துறை அமைச்சரும், மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்றுடன் ஒப்பிடுகையில் மழையின் தீவிரம் குறைந்திருப்பது நிம்மதியளிக்கிறது. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சமீபத்திய நிலவரப்படி, மழை தொடர்பான சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேரை காணவில்லை. 13 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் செயல்படும் 209 நிவாரண முகாம்களில் 5,792 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் 27 வீடுகள் முழுமையாகவும், 196 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் அரசின் நிவாரண உதவி உறுதியாக வழங்கப்படும். மழை குறைந்திருந்தாலும், எந்தவித அவசர சூழலையும் எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு கூறினார்.

7 அணைகளுக்கு ரெட் அலர்ட்;
கேரளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையை தொடர்ந்து பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஆழியார், கல்லார்குட்டி, கல்லார், லோயர் பெரியார், பெரிங்கல்குத்து, நெய்யார் மற்றும் மங்கலம் அணைகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் இந்த அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 36.33 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்;
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்பட ஏராளமான சர்வதேச சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ் பெறப்படும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று இடுக்கி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Related Stories: