சென்னை: முதலமைச்சர் என்றாலே தற்போது முதல்வராக இருக்கும் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் பெயர் தான் நினைவிற்கு வருகிறது போல. அதனால் தான் திட்டங்களின் பெயரை எல்லாம் மாற்றி வருகின்றனர். அதே போல அமைச்சர் நிர்மல்குமார், எப்போதுமே திசைதிருப்பும் வேலையை தான் செய்து வருகிறார் என்று திமுக எம்எல்ஏ சிவசங்கர் கூறி உள்ளார்.
செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில்களை சொல்லாமல், வேறு ஏதேதோ பதில்களை சொல்லி அப்படியே திசை திருப்பும் வேலையை தான் அவர் பெரும்பாலும் செய்து வருகிறார் என சிவசங்கர் குற்றம்சாட்டி உள்ளார். அதே போல பிற துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் பெரிதாக எதுவும் தங்கள் துறைகளை பற்றி பேசுவது போல தெரியவில்லை. ஆனால் அமைச்சர் நிர்மல்குமார் அவர்களுக்கெல்லாம் சேர்த்து தன்னுடைய துறை பணிகளை பற்றி கூறுவதை தவிர்த்து விட்டு, பிற துறைகளை பற்றி பேசுகிறார்.
மின்கட்டணம் அதிகமாக வந்தது பற்றி புகார்கள் பெரிதாக வரவில்லை, ஆனால் நாங்கள் சாதாரணமாக ஆய்வு செய்து வருகிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார். இது போன்ற பதில்களையெல்லாம் பார்த்தால் இவர்களே குண்டு வைப்பார்களாம், இவர்களே எடுப்பார்களாம் என்கிற ரீதியில் தான் உள்ளது. அமைச்சர் நிர்மல்குமார் தனது துறையின் மீது உரிய கவனம் செலுத்தாததால் தான், தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை பிரச்சனை நிலவுகிறது என்றார்.
அதே போல கர்நாடகா செல்லும் விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை, ஆனால் கர்நாடக முதல்வர் இங்கு நிலைமை சரியில்லை விஜய், வேறு தேதியில் சந்திக்கலாம், தற்போதைக்கு இங்கு வராதீர்கள் என்கிறார். மக்களின் மற்றும் விவசாயிகளின் உணர்வுபூர்வமான பிரச்சனையில் கூட இப்படி கள்ள மௌனம் காப்பது எத்தனை நாட்களுக்கு சரியாக இருக்கும்?
பதிலேதும் சொல்லாமல் அமைதி காத்தால் மக்கள் மத்தியில் பிரச்னை ஏதும் வெடிக்காது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் போல.. இந்த அமைதி தான் எல்லாவற்றுக்கும் உங்களது பதில் என்றால், ஒருகட்டத்தில் மக்கள் மத்தியில் ஒரு பெரும் புரட்சியாக வெடிக்கும். இதை உணராமலேயே இருந்தால் மிகப்பெரிய ஆபத்தை தவெக அரசு சந்திக்கும் என்பதே நிதர்சனம் என்று முதல்வரையும், தவெக அரசையும் திமுக எம்எல்ஏ சிவசங்கர் எச்சரித்து உள்ளார்.
