பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு: 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்!

இஸ்லாமாபாத்: வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான ‘பிராட் பீக்’ சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச மலையேற்ற வீரர்கள் 10 பேர் காணாமல் போயுள்ளனர். பாகிஸ்தான் பல முக்கிய மலைச்சிகரங்களைக் கொண்டுள்ளது; இங்குள்ள மலைச்சிகரங்களில் ஏறுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மலையேற்ற வீரர்கள் வந்து செல்கின்றனர்.

வட பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 8,047 மீட்டர் 26,401 அடி உயரத்தில் ‘பிராட் பீக்’ மலைச்சிகரம் அமைந்துள்ளது. இது உலகின் 12 ஆவது மிக உயரமான மலைச்சிகரமாகும். அங்கு அவ்வப்போது பலத்த மழையும் கடும் பனிப்பொழிவும் நிலவும். இதன் காரணமாக, பனிச்சரிவும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், நேற்று நேபாள பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று, ‘பிராட் பீக்’ மலைச்சிகரத்தில் மலையேறத் தொடங்கினர். இந்தநிலையில், அங்கு நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆல்பைன் கிளப் ஆஃப் பாகிஸ்தான்’ அமைப்பின் துணைத் தலைவர் கர்ரார் ஹைதரி வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிம்ஸ் டாய்’ தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹைதரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனடி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவற்காக, அந்த அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் இர்பான் அர்ஷத் மற்றும் மூத்த நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து வருகின்றனர். வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப, ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: