சேலம், ஜூலை 31: சேலம் ஆவினில் பால் கொள்முதல் குறைந்து உள்ளதால், பொதுமக்களுக்கு பால் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது, 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. இதில் 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து வருவதால், சேலம் ஆவினில் பால் கொள்முதல் குறைந்துள்ளது. சேலம் ஆவினில் தற்போது 5.40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த காலத்ைத விட 80 ஆயிரம் லிட்டர் குறைவாகும். சேலம் ஆவினில் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், உள்ளூர் பால் முகவர்களுக்கு 30 சதவீதம் அளவுக்கு மேல் பால் அளவு குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
பால் அளவை குறைத்து வழங்குவதால், பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆடி மாதத்தில், மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடந்து வரும் நிலையில், பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை அதிகமாக உள்ளது. ஆவின் பால் விலை குறைவாக உள்ளதால் டீக்கடை மற்றும் கடைகளில் தனியார் பாலை விட, ஆவின் பாலை அதிகமாக வாங்குகின்றனர். கடந்த சில நாட்களாக சேலம் மாநகர பகுதியில், பால் முகவர்களிடம் காலை 8 மணிக்கே ஆவின் பால் தீர்ந்து விடுகிறது. பால் தட்டுப்பாட்டால் பொதுமக்கள், கடைகளில் கூடுதல் விலைக்கு தனியார் நிறுவன பால் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களிடம் கேட்டால், ஆவினில் பாலின் அளவை குறைத்து வழங்குவதாக கூறுகின்றனர். இதனால், தற்போது கூடுதல் விலை கொடுத்து கடைகளில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால் பால் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, தட்டுப்பாடு இன்றி ஆவின் பால் கிடைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.
இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கால நிலை மாற்றம், தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்வது போன்ற காரணங்களால், ஆவினுக்கு வரும் பாலின் அளவு குறைந்து விட்டது. இருப்பினும் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆவின் பால் விற்பனையும் அதிகரித்துள்ளது,’ என்றனர்.
விலை உயர்த்தி வழங்க வேண்டும்
சேலம் ஆவினில் கடந்த ஆண்டு, 6 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 5.40 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. தினமும் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது. பால் கொள்முதல் குறைந்ததற்கு, தற்போது நிலவும் வறட்சியும் ஒரு முக்கிய காரணம். இதன் காரணமாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனியார் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கிறது. எனவே, தமிழக அரசும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், ஆவினில் பால் கொள்முதல் அதிகரித்து தட்டுப்பாடு குறையும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
