பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்; நகைக்கடையில் ரூ.10 லட்சம் தங்க, வைர நகைகள் திருடிய எலி

 

பெங்களூரு: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் நகைக்கடையில் மோதிரம், செயின் என திருட்டில் ஈடுபட்ட ஒரு எலியின் தொடர் திருட்டுத்தனம் சிசிடிவி கேமரா மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாநகரிலுள்ள கால்டெக்ஸ் சர்க்கிள் அருகே விஸ்வாஸ் என்ற நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் காலையில் கடையை திறந்தனர்.

அதன் பிறகு வழக்கம் போல் ஷோகேசில் தங்கம் மற்றும் வைர நகைகளை அடுக்கி சரி பார்த்தனர். அப்போது 50 கிராம் எடைக்கு அதிகமாக வைரம் மற்றும் தங்க நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் அதிகம் என்பதால் கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் ஊழியர்களும் அச்சம் அடைந்தனர். கடையின் கதவு ஷெட்டர் உடைக்கப்படவில்லை. பூட்டு உடைக்கப்படவில்லை. சுவர் துளையிடப்படவில்லை. ஆனால் நகை எப்படி மாயமானது என்று திகைத்தனர்.

இதற்கிடையே கடையின் உரிமையாளர் எதற்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஒருமுறை பார்த்து விடலாம் என முடிவு செய்தார்.அதன்படி கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் பார்த்த காட்சியால் கடையின் உரிமையாளர் மட்டும் இன்றி அந்த கடையில் வேலை செய்த ஊழியர்களும் ஆச்சர்யமடைந்தனர். ஒரு எலி கடையிலுள்ள ஒரு சிறிய பொந்தில் இருந்து நகைகள் இருக்கிற இடத்திற்கு வருகிறது,

அதன் பிறகு இங்கேயும் அங்கேயும் பார்த்து கொள்கிறது. அதன் பிறகு வைர மற்றும் தங்க நகைகள் இருக்கிற இடத்திற்கு சென்று அதை எடுத்து விட்டு மீண்டும் அதே பொந்திற்குள் சென்று விடுகிறது. இந்த காட்சியை பாத்த கடையின் உரிமையாளர் உடனடியாக அந்த பொந்திற்குள் சோதனை செய்தார்.

அப்போது அந்த பொந்தில் ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொன்றாக 10 மோதிரங்கள், 3 தங்க செயின்கள் மற்றும் வைரம் என அனைத்தும் சிக்கியததால் நகைக்கடை உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்தார். நகைக்கடையில் பல நாள் ரகசிய திருட்டில் ஈடுபட்ட அந்த எலி தப்பிவிட்டது.

அதே நேரம் வைரம் மற்றும் நகைகளுடன் கணக்கில் இல்லாத ஏற்கனவே திருடப்பட்ட மோதிரங்களும் திரும்பவும் கிடைத்துள்ளது. தற்போது நகைக்கடையில் கைவரிசை காண்பித்த அந்த திருட்டு எலியை பற்றி தான் அனைவரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் நகைகளை எலி திருடும் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: