மானாமதுரை: பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் வசதிக்காக மானாமதுரை – சிவகங்கை இடையே காலை, மாலை (பீக் ஹவர்) நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சிவகங்கையில் உள்ள அரசு கலை கல்லூரி, அரசு பெண்கள் கலை கல்லூரி, ஐடிஐ, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சென்று வருகின்றனர். மானாமதுரையில் இருந்து காலை 8 மணி முதல் 9.15 மணிவரை 6 அரசு பேருந்துகளும், இரண்டு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் இந்த பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். இதனால் பஸ்களில் காலை, மாலை (பீக் ஹவர்) நேரங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களில் போதிய இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சிலர் ஆபத்தான வகையில் பஸ் படிகளில் தொங்கியபடி செல்லும் நிலை தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக முகூர்த்த நாட்கள், விழா காலங்களில் மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்டிலேயே பஸ்களில் கூட்டம் நிரம்பிவிடுகிறது. இதனால் அண்ணாசிலை, கோர்ட் பஸ் ஸ்டாப், யூனியன் ஆபிஸ், தயாபுரம், சிப்காட் பஸ் ஸ்டாப்புகளில் பயணிகளை ஏற்ற மறுத்து பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுகிறது. இதனால் பஸ்களை நம்பி காத்திருக்கும் பயணிகள், மாணவர்கள் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர். இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், `மானாமதுரையில் இருந்து தினமும் காலையில் சிவகங்கை செல்லும் மாணவர்களுக்கு போதிய பஸ்கள் இல்லை. சில நேரங்களில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்கின்றனர். இதேபோல, மாலை நேரமும் போதிய பஸ்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வந்துசேரும் நிலை உள்ளது. தொலைதூர கிராமங்களுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் மாணவிகளின் பெற்றோர் மானாமதுரைக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். எனவே, காலை மாலை பீக் ஹவர் நேரங்களில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
