நாகர்கோவில்: நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் பயன்பாடின்றி காணப்படும் கழிப்பறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. ஆகவே அந்த கழிப்பறையை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் முக்கியமான பகுதிகளில் பொதுகழிப்பறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அவற்றின் பயன்பாடு குறைந்த நிலையில் பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை தவிர மற்ற பகுதியில் இருந்த கழிப்பறைகள் அகற்றப்பட்டன. ஊட்டுவாழ்மடம் ரயில்வே சுரங்கபாதை அமைந்துள்ள இடத்தில் முன்பு வீடுகள் இருந்தன.
அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பறை அமைத்து கொடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ரயில் நிலையம் விரிவாக்கம், சுரங்கபாதை அமைப்பு, இரட்டை ரயில்பாதை அமைப்பு என பல வேலைகள் நடந்ததால், ஊட்டுவாழ்மடத்தில் இருந்து பரக்கின்கால் பகுதி வரையிலான வீடுகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.
வீடுகள் அகற்றப்பட்டபிறகு, ஊட்டுவாழ்மடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கழிப்பறை யாரும் பயன்படுத்தாமல் உள்ளது. ஆனால் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. குடிமகன்கள் மது குடிப்பதுடன், பல்வேறு சமுகவிரோத செயல்கள் நடந்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் சமுகவிரோத கூடாரமாக மாறி வரும் அந்த கழிப்பறையை அகற்றவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
